தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: எடப்பாடி முதல் கமல் வரை… ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்!

Published On:

| By Selvam

டிடி தமிழ் தொலைக்காட்சி நடத்திய இந்தி மாத நிறைவு விழா நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது திராவிடநல் திருநாடு வரி புறக்கணிக்கப்ப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று (அக்டோபர் 18) கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்…

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அதில் வரக்கூடிய “தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.

இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி. திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்.

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் செயல்படும் டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில், எதிர்ப்பையும் மீறி இந்தி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளது மோடி அரசு. மற்ற தேசிய மொழிகளை புறக்கணித்து இந்தியை மட்டும் கொண்டாடுவது, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றுள்ளார். அதில் ஒலிக்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில்  ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்த்துவிட்டு பாடியுள்ளனர். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவியை, பதவிக்காலம் கடந்தும் அதே பொறுப்பில் தொடர்ந்து வைத்துள்ளது மோடி ஆட்சி. ஆர்.எஸ்.எஸ் கொள்கையை இதன் மூலம் திணிக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். ஆளுநர் ரவியின் போக்கை கண்டிப்பதுடன், அவரை திரும்பப்பெற வேண்டுமென சிபிஎம் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை

ஆளுநர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆளுநரை திருப்தி படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதைத் திருத்தி, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை வாசிக்காமல் விடுபட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய கீதத்திலும் ‘திராவிட’ என்ற வார்த்தை வருகிறதே? அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா? தேசிய கீதம் நாட்டிற்கு பெருமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும். எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் விடுபட்டது ஏன்? – டிடி தமிழ் விளக்கம்!

விநாயகர் சிலை வைத்த விசிக – விசித்திர சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share