புகைப்படத்தில் இருக்கும் நபரைக் காணவில்லை. இத்தனைக்கும் இவர் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த நடிகர் . ஆனால் இவரை நீங்கள் இனி கண்டுபிடிக்க முடியாது .
குழப்பமாக இருக்கா?
மேல படியுங்கள். புரியும் .
கரிக்கோல்ராஜ் என்ற பெயர் கொண்ட இந்த நடிகரை நீங்கள் 80, 90களில் வந்த படங்களில் பார்த்து இருப்பீர்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த இவர் நடிப்பின் மீது கொண்ட நாட்டம் காரணமாக மதுரையில் உள்ள நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்து பின்பு சினிமாவுக்கு வந்துள்ளார். 1951ல் சுதர்சனம் என்ற படத்தில் அறிமுகமான இவர், காதலிக்க நேரமில்லை, கலங்கரை விளக்கம், அடிமைப்பெண், கற்பகம், பதிபக்தி, பாதகாணிக்கை, நவராத்திரி என பல படங்களில் நடித்தார்.
பி.யூ சின்னப்பா முதல் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், ராமராஜன் என 5 தலைமுறை கலைஞர்களுடன் நடித்தார். எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்துள்ளார் இவர்.
இவருக்கு தூறல் நின்னுபோச்சு படம் ஒரு முக்கிய அங்கீகாரத்தை கொடுத்தது . பெரும்பாலும் கிராமத்தலைவர், பெரிய மனிதர், இது போல படங்களில் தான் இவர் அதிகம் நடித்தார்.
500 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்திருக்கிறார் .
வடலூர் வள்ளலார் மீது பக்தி கொண்ட இவர் வடலூர் செல்வது, அன்னதானம் செய்வது போன்றவற்றின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர்.
ராமராஜன் நடிப்பில் வந்த பொன்னுக்கேத்த புருசன் தான் அவரின் கடைசிப் படம் .
1993ம் ஆண்டு ஒரு நாள் சென்னையில் காலையில் நடைபயிற்சி சென்றுவிட்டு பேப்பர் வாங்கி வந்து விடுகிறேன் என மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றவர்தான்.. அதன் பின் இவர் வீடு திரும்பவே இல்லை. என்ன ஆனார் எங்கு போனார். அவருக்கு என்ன ஆகி இருக்கும் என்று எந்தத் தகவலும் இல்லை. . காவல்துறையில் புகார் அளித்தும் இவர் இன்றுவரை கிடைக்கவில்லை.
தற்போது இவர் உயிருடன் இருந்தால் இவருக்கு வயது 95.
இப்படியும் ஒரு விந்தை.
— ராஜ திருமகன்
