ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு மோசமான முறையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளால் முதல்வர் கான்வாய் நேற்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனையடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையை அடுத்து ஈசிஆரில் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 10) நடத்தப்பட்டது.
ஆனால் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக மோசமாக இருந்ததால் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட காலதாமதம் பெங்களூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பி சென்றனர்.
மேலும் அதிகமான டிக்கெட் விற்பனையால் 1000 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கு கூட இருக்கை கிடைக்கவில்லை என்றும், இதுவரை நடந்ததில் மோசமான இசைநிகழ்ச்சி இதுதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே மறைந்த முதல்வர் கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனின் பேத்தி திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை மகாபலிபுரம் சென்றார். அதே நேரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதல்வர் கான்வாய் சிக்கியதால் ராங் ரூட்டில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Even our CM sir was not spared
His convoy around 8:45 pm opposite the venue ECR had to squeeze in opposite lane.Pathetic organising by #actcevents#MarakkumaNenjam #ARRahman #Shared #arrahmanconcert #ARR pic.twitter.com/T46T6o4yjN
— Bruce Banner (@brucebanner3092) September 10, 2023
இந்தநிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என்று தாம்பரம் காவல் ஆணையரகம் உறுதி செய்துள்ளது.
அதில், “ஈசிஆர் பகுதியில் நேற்று இசைநிகழ்ச்சியில் நடந்த அத்தனை இடர்பாடுகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்.
மேலும் நிகழ்ச்சியையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருக்கைக்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்தது மற்றும் கார் பார்க்கிங் வசதியை சரிவர செய்யாததே காரணம்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வந்த கான்வாயும் இந்த நெரிசலில் சிக்கி மெதுவாக சென்றது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’மறக்கவே முடியாது ரஹ்மான்’: இசை நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
