சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்தில் பாரத ரக்ஷா சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.டி.ராமராவ் தொடர்பு இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகா, தனது கருத்துக்கு இன்று (அக்டோபர் 3) மன்னிப்பு கோரியுள்ளார்.
தெலங்கானா மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதாகவும், அவர் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சைகளுடன் தொடர்புடையவர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
அதோடு, “நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கூறியது தெலுங்கு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுரேகாவின் இந்த கருத்துக்கு நாகர்ஜூனா, சமந்தா, நாக சைதன்யா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், நானி உள்ளிட்ட நடிகர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சுரேகாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கே.டி.ஆர்.
இதற்கிடையே, தன்னை அவதூறாக விமர்சித்ததற்காக அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக அவதூறு வழக்கு தொடர்வது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கே.டி.ராமாராவ் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், அமைச்சர் தனது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் கோரினார்.
நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன்!
இந்த நிலையில், சமந்தா- நாக சைதன்யா விவாகரம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அமைச்சர் கோண்டா சுரேகா இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், “எனது கருத்தின் நோக்கம் ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பது தானே தவிர, உங்களை (சம்ந்தா) காயப்படுத்துவதற்காக அல்ல, நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு ஒரு அபிமானம் மட்டுமல்ல.. ஒரு இலட்சியமும் கூட
எனது கருத்துக்களால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டால், எனது கருத்துக்களை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன்.. தவறாக நினைக்க வேண்டாம்” என்று சுரேகா தெரிவித்துள்ளார்.
கே.டி.ஆர். மன்னிப்பு கேட்க சொல்வது வியப்பாக இருக்கிறது!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த விளக்கத்தில், “கே.டி. ராமாராவ் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை. அவரால் நிறைய இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறேன்.
அவரைக் குறித்துப் பேசும்போது வேறொரு குடும்பத்தைப் பற்றியும் எதிர்பாராமல் பேசிவிட்டேன். அதுகுறித்து பலரும் ட்விட் செய்திருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதனால், நேற்றே அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன்.
எனது அரசியல் வாழ்க்கையில், நான் யாருடைய குடும்பப் பிரச்சினைகளையும் அரசியல் ஆதாயங்களுக்காகக் குறிப்பிடவில்லை. நான் சமந்தாவை இழிவுபடுத்தவில்லை. யாரோ ஒருவர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறிவைத்து நான் ஒருபோதும் பேசவில்லை. அது என் பாணியோ நோக்கமோ அல்ல.
எனினும், கே.டி.ராமாராவுக்கு பெண்கள் மீது தரம் தாழ்ந்த பார்வை இருப்பது உண்மைதான். இதில் அவர் என்னை மன்னிப்பு கேட்க சொல்வது வியப்பாக இருக்கிறது” என்று சுரேகா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா