கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், தேவையற்ற கருத்துக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக விளக்கமளிக்க மேத்யூ சாமுவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தவறான கருத்துகளை கூறியிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (டிசம்பர் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “குற்ற வழக்கின் எப்.ஐ.ஆரிலும், புலன் விசாரணையிலும் மனுதாரருக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் மேத்யூ சாமுவேல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்த பதில் மனுவில் தேவையில்லாத விஷயங்களை கூறியிருக்கிறார். அது மேலும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று வாதாடினார்.
இதையடுத்து நீதிபதி, ” பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அவரது கருத்தை பெற்று தெரிவிக்கும்படி மேத்யூ சாமுவேல் தரப்புக்கு உத்தரவிட்டார்.
விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!