அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேச்சு : அப்பாவுக்கு சம்மன்!

Published On:

| By Kavi

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில் எழுத்தாளர் ராம்குமார் எழுதிய புத்தக வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தெரியாமல் இருந்ததாகவும், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்ள இருந்ததாகவும், ஆனால் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அதை மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பாவு பேசியது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளருமான பாபு முருகவேல் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் அப்பாவு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஆனால் இந்த வழக்கு எடுக்கப்படாத நிலையில் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அங்கும் இந்த வழக்கு கோப்பு எடுக்கப்படாத நிலையில் சென்னை உயா் நீதிமன்றத்தை நாடினார் பாபு முருகவேல். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

வினேஷ் போகத் அதிகாரப்பூர்வமாக தகுதியிழப்பு: ஒலிம்பிக் விதிகள் சொல்வது என்ன?

‘கோட்’ ரிலீஸ்… கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share