ஒரு நாளில் பல்வேறு தருணங்களில் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறோம். தண்ணீரால் கழுவுகிறோம். அப்போதுதான் முகத்தில் பருவோ, கரும்புள்ளிகள் போன்ற சின்ன மாற்றங்களோ ஏற்பட்டாலும் என்னவென்று உடனே தெரிகிறது.
அதேபோல் பாதங்களை தினமும் கவனித்தால்தான் அதன் மாற்றங்கள் புரியும். எனவே, பாதங்களை நன்றாகக் கழுவி, சுத்தமாகத் துடைத்த பின்பு 5 நிமிடங்களாவது கவனிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். Take care of your feet daily
பாதத்தில் எங்கேனும் அடிபட்டிருக்கிறதா, வீக்கமோ தழும்போ இருக்கிறதா, பாத விரல்களுக்கிடையில் புண்களோ, நிற மாற்றமோ இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்புகளை பாதிக்கும். ஒருமுறை நரம்புகள் பாதித்துவிட்டால் மீண்டும் சரி செய்ய முடியாது. அதன் தீவிரத்தை வேண்டுமானால் தணிக்க முடியும். நம் உடலின் நரம்புகளை மின்சார வயர்களுடன் ஒப்பிட்டு இந்த உதாரணத்தைப் புரிந்து கொள்ளலாம். வயரில் காப்பர் இருக்கும், அதன் மேல் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக்கால் ஆன கோட்டிங் இருக்கும்.
இதேபோல் நம் நரம்புகளின் மேல் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் உறைபோல `மயலின் ஷீத்’ (Myelin Sheath) என்பது இருக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது ஓர் இலையை பூச்சி அரிப்பது போல, இந்த மயலினை சர்க்கரை சேதப்படுத்திவிடும். இதனால் மயலினில் செல்லும் மிகக்குறைந்த மின் அழுத்தம் ஆங்காங்கே தாக்குவதால் எரிச்சலான உணர்வை நோயாளிகள் அனுபவிப்பார்கள். எரிச்சல் வந்தாலே மயலின் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். எந்த உணர்வும் வரவில்லை, மரத்துப்போய்விட்டது என்றால் நரம்பு பலவீனமாகி விட்டது என்று அர்த்தம்.
நரம்பு பலவீனமான பிறகு உச்சி வெயிலில் நடந்தாலும் லேசாக சுடுவது போன்றே உணர்வோம். ஆனால், வெயிலின் தாக்கம் பாதத்தின் மூலம் மொத்த உடலையுமே தாக்கிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் காலில் கொப்புளம் உருவானதைப் பார்த்த பிறகே அதிர்ச்சியாக இருக்கும். Take care of your feet daily
அதனால் முதலில் சர்க்கரை அளவை சரியாகப் பராமரிப்பதன் மூலம் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். ஏதோ சில காரணங்களால் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால், அதன்பிறகு பாதங்கள் பாதிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
வெறும் கால்களுடன் எங்கும் நடக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் வீட்டுக்குள் நடக்கும்போதும் அதற்கென தனி காலணிகள் வைத்துக் கொள்ள வேண்டும். கோயில் உள்ளிட்ட காலணிகள் அணிந்து செல்லக்கூடாத இடங்களுக்குச் செல்வதாக இருந்தால் வெயில் குறைந்த காலை வேளை அல்லது மாலை வேளையில் செல்லலாம். பாதங்களில் சாக்ஸ் அணிந்து செல்வது இன்னும் பாதுகாப்பானது. இதன் மூலம் கல்லோ, முள்ளோ, வெயிலோ பாதங்களைத் தாக்காமல் தவிர்க்க முடியும். அதேபோல நீரிழிவு நோயாளிகள் நகங்களை வெட்டும்போதும்கூட மிகவும் ஒட்டி வெட்டக் கூடாது. Take care of your feet daily