திருச்சூரில் 87 வயது மூதாட்டியை எரித்துக் கொலை செய்ததற்காக, அவரது கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள வெள்ளிக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் செறியகுட்டி. இவருக்கு 91 வயதாகிறது. இவரது மனைவி பெயர் முக்காட்டுவீட்டில் கொச்சுதெர்சியா. இவரது வயது 87. இந்தத் தம்பதியருக்கு ஏழு குழந்தைகள். ஆனாலும், இவர்கள் இருவரும் வெள்ளிக்குளங்கராவில் தனியே வசித்து வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று கொச்சுதெர்சியா காணாமல் போனதாக, அவரது மகன் ஜோபி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதே நேரத்தில், அன்றைய தினம் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி கொச்சுதெர்சியா வெளியில் சென்றதாகப் போலீஸாரிடம் கூறினார் செறியகுட்டி.
போலீசார் அவர்களது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் அடிக்கடி சண்டை போட்டுவந்தது தெரிய வந்தது. இதையடுத்து, செறியகுட்டி போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில், குடும்பச் சண்டையில் கொச்சுதெர்சியா கொல்லப்பட்ட தகவல் வெளியானது.
ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, கொச்சுதெர்சியாவைக் கீழே தள்ளியுள்ளார் செறிய குட்டி. அதன்பின், தெர்சியாவின் ஊன்றுகோலால் அவரது தலையில் அடித்துள்ளார். இதனால், அவர் மரணமடைந்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து, அவர் மரணமடைந்ததை அறிந்தார் செறியகுட்டி. என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டுத் தோட்டத்தில் கொச்சுதெர்சியாவின் உடலை எரித்துவிட்டார். அவர் பயன்படுத்தி வந்த ஊன்றுகோல் ரத்தம் படிந்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது மகன் வீட்டில் மனைவியின் நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டினார் செறியகுட்டி. வெள்ளிக்குளங்கரா போலீஸார் அவரைக் கைது செய்து, இரிஞ்சாலக்குடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அங்கு, செறியகுட்டியை 14 நாட்கள் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
