ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது டி-20 உலகக் கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 9ம் தேதி நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதனை தொடர்ந்து அடிலெய்டில் இந்தியா – இங்கிலாந்து மோதிய 2வது அரையிறுதி ஆட்டத்தின் மேல் பலரது கவனமும் குவிந்தது.
ஆனால் நியூசிலாந்து அணி தோற்ற முதல் அரையிறுதியைப் போலவே இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் எளிதாக வீழ்ந்தது.
இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, அரையிறுதிப் போட்டியுடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
பொதுவாக நாக் அவுட் ஆட்டங்களில் நெருக்கடி என்பது மைதானத்தில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஏற்படும். அதனை சாமர்த்தியமாக சமாளிக்கும் அணியே அடுத்த இடத்திற்கு முன்னேறும்.
நேற்றைய போட்டியிலும் ’கட்டாயம் வெற்றி பெற வேண்டும்’ என்ற அந்த நெருக்கடி இருந்தது. எனினும், அதனால் மட்டுமே இந்தியா தோற்றது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவின் பேட்டிங்கிலும் சரி, பெளலிங்கிலும் சரி குறிப்பிட்ட வெகுசில வீரர்களை தவிர மற்ற இந்திய வீரர்கள் மத்தியில் ’வெற்றி பெற்றே தீர வேண்டும்’ என்ற தீர்க்கமான உடல்மொழி தெரியவே இல்லை.
மேலும் பேட்டிங், பெளலிங், பீல்டிங் போன்றவற்றிலும் இந்திய அணி முழுமை பெறவில்லை என்பதும், இங்கிலாந்து அணியினருக்கு இருந்த தெளிவான திட்டம் நமது அணியினரிடம் இல்லை என்பதும் நேற்றைய ஆட்டத்தில் தெளிவானது.
கேப்டனின் பாஸிட்டிவ் அணுகுமுறை!
அடிலெய்டில் நடந்த டி20 போட்டிகளில் நேற்றைய ஆட்டம் முன்பு வரை டாஸ் ஜெயித்த எந்த அணியும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஆனால் நேற்று டாஸ் ஜெயித்து பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியை புரட்டி எடுத்ததோடு வெற்றியுடன் வரலாற்றையும் மாற்றி எழுதியுள்ளது.
அதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லரின் தெளிவான பார்வை தெரிந்தது. போட்டிக்கு முந்தைய பேட்டி ஒன்றில், ’இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக எவ்வளவு ரன் அடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த பட்லர், “எனக்கு அதிகபட்ச ஸ்கோரில் உண்மையில் ஆர்வம் இல்லை. ஆனால் இந்தியாவை வெற்றிபெறுவதற்கான ஸ்கோரை அடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்து இருந்தார்.
அவரின் அந்த நேர்மறையான அணுகுமுறை தான் ஆட்டத்திலும் எதிரொலித்தது. டாஸ் வென்று, இந்தியா நிர்ணயித்த 169 என்ற இலக்கை சர்வ சாதாரணமாக 16 ஒவரிலேயே எட்டியது ஹேல்ஸ் – பட்லர் கூட்டணி.
தொடக்க வீரர்கள் சொதப்பல்!
இந்திய அணியின் பலமே பேட்டிங் தான். ஆனால் இந்த உலகக்கோப்பையில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் பாண்டியாவை தவிர்த்து மற்ற வீரர்களின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
அதிலும், முக்கியமான அரையிறுதிப் போட்டியில் 2வது ஓவரிலேயே தொடக்க வீரரான ராகுல், வழக்கம்போல் சொற்ப ரன்னில் (5) ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பிறகு பவர்பிளே (1-6) ஓவர்களில் ரோகித், விராட்கோலி இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஆடினார்களே தவிர, அதிரடியாக ஆடவில்லை. இதனால் பவர்பிளேயில் இந்தியாவுக்கு 38 ரன்களே கிடைத்தது.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணி ப்வர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் வாட்சன், ”பேட்டிங் பவர் பிளேயில் இந்தியா தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியது. இந்திய வீரர்கள் முதல் 6 ஓவர்களை பயன்படுத்த தவறினர். கடைசியில் ஹர்திக் பாண்டியா வேகமாக ரன் விளாசினார். இதேபோல் தொடக்கத்திலேயே இந்திய வீரர்கள் தாக்குதல் பாணியை கையாண்டிருக்க வேண்டும்” என்று கூறினார். இதே கருத்தை தான் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனும் கூறினார்.
இந்திய வீரர்களின் ஸ்லோ பேட்டிங்!
டி20 போட்டிகளின் அழகே பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தும் அதிரடி ஆட்டம் தான். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம் அது மொத்தமாக மிஸ்ஸிங்.
கடைசி கட்டத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மட்டுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தார்.
அவரை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அதிக பந்துகளை வீணடித்தனர். ராகுல் 5 (5), ரோகித் 28 (27), கோலி 50 (40), சூர்யகுமார் 14 (10), பண்ட் 6 (4) என்ற அளவிலேயே பந்துகளுக்கும், ரன்களுக்கு அதிக வித்தியாசம் இல்லமால் விளையாடி ஆட்டமிழந்தனர்.
முதல் 4 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 83 பந்துகள் விளையாடி 96 ரன்கள் மட்டுமே குவித்துள்ளனர்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் 42 பந்துகளை டாட் பாலாக விளையாடினர். அதாவது சரியாக 7 ஓவர்களை இந்திய அணியினர் ஒரு ரன் கூட அடிக்காமல் வீணடித்துள்ளனர்.
நொறுங்கிய இந்திய பந்துவீச்சு!
இந்திய பேட்டிங் பவர்பிளே எவ்வளவு சொதப்பியதோ, அதே சொதப்பல் இந்திய அணி பெளலிங்கின் போதும் எதிரொலித்தது.
நேற்று பேட்டிங் பவர் பிளேயில் இங்கிலாந்து பேட்டிங் செய்ததை பார்க்கும்போது பங்காளதேஷ்க்கு எதிரான ஆட்டம், ஒவ்வொரு இந்திய ரசிகனின் மனதிலும் வந்து போயிருக்கும்.
இந்த உலகக்கோப்பையில் கடந்த 5 போட்டிகளில் முதல் ஓவரை வீசியுள்ள புவனேஷ்வர் குமார், இதுவரை 1, 0, 3, 2, 0, என்ற கணக்கிலே சிறப்பான பெளலிங்கை தொடுத்துள்ளார்.
ஆனால் நேற்றைய போட்டியில் அவர் முதல் ஓவரிலே 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களை கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
இதனை பெரும் பாஸிட்டிவாக கண்டுகொண்ட இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வீதம் அதிரடியாக விளையாடினர்.
இதனால் முதல் 10 ஓவர்களில் 98 ரன்கள் குவித்த இங்கிலாந்து, 16 ஓவரில் 170 ரன்களை குவித்து இந்தியாவின் படு தோல்வியை உறுதிப்படுத்தினர்.
இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வளவு மோசமாக இருந்தது என்றால் இங்கிலாந்து அணி மொத்தம் அடித்த 170 ரன்களில் 112 ரன்களை பவுண்டரி, சிக்ஸர் அடித்து மட்டுமே குவித்திருந்தது.
மேலும் புவனேஷ்வர், ஷமி, அர்ஸ்தீப், ஹர்திக், அஸ்வின், அக்சர் என 6 பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தியும், இங்கிலாந்து அணியின் அதிரடி நிறைந்த அஸ்திவார பேட்டிங்கை கடைசி வரை சிதைக்க முடியவில்லை.
இதுகுறித்து பின்னர் பேசிய இந்திய முன்னாள் வீரர் சேவாக், இந்திய அணியினரின் பந்துவீச்சு தெளிவற்ற நிலையில் இருந்தது என்றும், இதனை இங்கிலாந்தின் ஹேல்ஸ் மற்றும் பட்லர் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “நாங்கள் நேர்த்தியாக பந்து வீசி அவர்கள் ரன்கள் எடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. புவேனஷ்வர்குமார் முதல் ஓவரை வீசிய போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. ஆனால் பந்தை சரியான பகுதியில் ‘பிட்ச்’ செய்து வீசவில்லை” என்று தெரிவித்தார்.
ஓட்டைகளை அடைக்காத படகு!
சூப்பர் 12 சுற்றின் போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டபோதும், தொடக்க ஆட்ட வீரர்களின் படுமோசமான ஆட்டம், மிடில் ஆர்டரில் குளறுபடி, சுழற்பந்துவீச்சில் தயக்கம் ஆகிய குறைபாடுகள் இருந்தன. இதனை கவாஸ்கர், ஹர்சா போக்லே உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் ஆகியோர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர்.
இந்நிலையில் அந்த குறைகளை இந்திய அணி கடைசி வரை நிவர்த்தி செய்யவில்லை. இதுவே ஓட்டையில் அடைக்காத படகு போல், இந்திய அணி அரையிறுதியில் தோல்வியில் மூழ்கியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேவேளையில் தங்கள் மீது வைக்கப்பட்ட குறைபாடுகளை பாகிஸ்தான் அணியினர் திருத்திக்கொண்டதே, அரையிறுதியில் அவர்களின் அபாரமான எழுச்சிக்கு காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை – மைசூரு வந்தே பாரத்: பட்ஜெட் விலையில் பயணிக்கலாமா?
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சவுக்கு சங்கர் விடுதலையில் சிக்கல் : என்ன காரணம்?