ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியின் இன்று (நவம்பர் 09) அரையிறுதி போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் மழை வந்தால் ஐசிசி வகுத்துள்ள நடைமுறை என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்க தொடங்கியுள்ளது.
12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இதுவரை 39 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.
மழையால் எழுந்துள்ள அச்சம்!
முதல் அரையிறுதி போட்டி இன்று மதியம் 1: 30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதை விட மழை வந்தால் என்னாகும் என்கிற அச்சத்தை தான் அதிகப்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமும் இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை மழையால் 3 போட்டிகள் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டுள்ளன. மேலும், 3 போட்டிகளில் ஓவர்கள் குறைக்கப்பட்டு டக் வொர்த் லீவிஸ் முறையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பல போட்டிகளின் போது மழை குறுக்கிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்த அதிசயங்களும் அரங்கேறியது.
ஐசிசி நடமுறை என்ன?
இதனால் தான் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது மழை வந்தால் என்ன ஆகும் என்கிற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களை துளைக்க தொடங்கியுள்ளது. ஆனால், இதற்காக ஐசிசி முன்னரே திட்டங்களை தீட்டிவைத்துள்ளது.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி அறிவிக்கப்படும். ஆனால் அதற்கான விதி முறை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2 அணிகளும் தலா 5 ஓவர்கள் விளையாடி இருந்தாலே டக்வொர்த் லீவிஸ் முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 10 ஓவர்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி 2 அணிகளும் 10 ஓவர்கள் விளையாடி இருந்தால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்படும். இல்லை என்றால் போட்டி மீண்டும் அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு முதல்நாள் கைவிடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும். இந்த நாளுக்கு ரிசர்வ் நாள் என பெயர். ஒரு வேளை ரிசர்வ் நாளிலும் ஆட்டத்தை தொடரமுடியாதபடி மழை வெளுத்து வாங்கினால் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு!
இதே வழிமுறை தான் இறுதிப்போட்டியிலும் கையாளப்பட உள்ளது. ஆனால், வெற்றியாளரை அறிவிப்பதில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ரிசர்வ் நாளிலும் ஆட்டத்தை தொடரமுடியாமல் போனால் இறுதி வரை வந்த இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் பகிர்ந்து அளிக்கப்படும்.
இன்று அரையிறுதிப்போட்டி நடைபெற உள்ள சிட்னி நகரில் மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதே போன்று நாளை இந்தியாவும் இங்கிலாந்தும் அடிலெய்டில் மோத உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்ட நாளில் 40 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இறுதிப்போட்டி நடைபெற உள்ள ஞாயிற்றுக் கிழமை அன்று மெல்போர்ன் நகரில் 95 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை கணிப்புகள் பொய்யாகுமா? நட்சத்திர அணிகள் அதிரடி ஆட்டத்தை ரசிக்க வானம் வழிவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அப்துல் ராஃபிக்