2008-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தனது அபார வெற்றியை பதிவு செய்தது. நாடெங்கு கொண்டாட்டம்… சமூகவலை தளங்களில் வாழ்த்து மழை…
எனினும் இத்தனையையும் தாண்டி முக்கியமாக பார்க்கப்பட்டது அணியை வழிநடத்திய அந்த இளம் கேப்டன் யார் என்பதுதான்.
பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த மேற்கு டெல்லியை சேர்ந்த அந்த இளைஞனின் கண்களில் தெரிந்த ஒளி தான் இந்திய அணியின் புகழுக்கு வழிகாட்டப் போகிறது என்பது அப்போதே கணிக்கப்பட்டு இருந்தது. ஆம் அந்த இளம் கேப்டன் தான் இந்திய அணியின் ரன் மெஷின் என்று ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்படும் விராட் கோலி.
கடைக்குட்டியா? சிங்கக்குட்டியா?
மேற்கு டெல்லியில் வசித்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் பிரேம் கோலி. அவரது மனைவி சரோஜ் கோலி. இவர்கள் இருவருக்கும் 1988-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி 3வதாக கடைக்குட்டியாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆம் அந்த சிங்கக்குட்டி தான் இன்றளவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச அரங்கில் பல பெருமைகளை தந்து கர்ஜித்து கொண்டிருக்கும் விராட் கோலி.
டெல்லியில் 1998-ம் ஆண்டு மேற்கு டெல்லி கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டது. அப்போது உத்தம் நகரில் விஷால் பாரதி பப்ளிக் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த விராட் கோலியை அவரது தந்தை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துவிட்டார். கிரிக்கெட்டின் மீது கோலி காட்டிய ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை மகனுக்கு நல்ல பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக பின்னர் கான்வெண்ட் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டார்.
டெல்லி அணிக்காக முதன் முதலில் 2002-ம் ஆண்டு 15 வயதுக்குட்பட்டோருக்கான பாலி உம்ரிகார் டிராபியில் களமிறங்கினார் விராட் கோலி. 2004-ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்சண்ட் டிராபியில் களமிறங்கிய விராட்கோலி அந்த தொடரில் 7 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 757 ரன்கள் குவித்து அங்கிருந்த தேர்வாளர்களின் கண்ணில் பளீரென மின்னினார்.
தந்தைக்கு மரியாதை!
அதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகாவில் நடந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக களமிறங்கி இருந்தார் விராட் கோலி.
அந்த போட்டியில் 90 ரன்கள் விளாசி சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கோலியிடம் அப்போது அதிர்ச்சிகரமான விஷயம் சொல்லப்பட்டது. ஆம் தனது திறமையை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்த தனது அருமை தந்தையை இழந்துவிட்டார் கோலி. இருப்பினும் போட்டியை முடித்த பின்பே தனது தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.
தந்தை உயிரிழந்த செய்தி தெரிந்தும் தான் உயிராகக் கருதிய கிரிக்கெட் போட்டியில் அவர் காட்டிய ஆர்வமும் அர்ப்பணிப்பும் பலரது புருவங்களையும் உயர்த்த வைத்தது.
சாதனை நாயகன் கோலி!
இதன் பிறகு 2006-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரண்டு தொடர்களையும் இந்திய அணி வென்றது.
2008-ல் முதன் முதலில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி இலங்கை அணியை எதிர்கொண்டார். பின்னர், 2010-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியிலும், 2011-ல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.
2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசினார் விராட் கோலி. 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். 2012-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார் விராட் கோலி.
சதமடிப்பதில் வேகம் காட்டிய விராட் கோலி எளிதாக சச்சினின் சாதனைகளை முறியடியடித்து விடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு அவர் மீது எழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை கிரிக்கெட்டில் அவர் காட்டி வரும் அதிரடி நிறைந்த அபாரமான ஆட்டமே அதற்கு சாட்சி!
2013-ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் காதலில் விழுந்த விராட் கோலி, 2017-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் வைத்து அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
2014-ம் ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலியின் தலைமையின் கீழ் 68 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 40 போட்டிகளில் வெற்றி பெற்றது. இது அவரை இந்தியாவின் சிறந்த டெஸ்ட் போட்டி கேப்டன்களில் ஒருவராக மாற்றியது.
2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிப்போட்டியில் பங்களாதேசுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 96 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் ஆட்டத்தில் குறைவான இன்னிங்ஸில் 8000 ரன்கள் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தோல்வியில் இருந்து மீட்டவர் கோலி!
இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கி இருக்கும் அபாயக்கட்டத்தின் போதெல்லாம் அங்கு ஒரு மீட்பராக வந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் விராட் கோலியின் பங்கு இன்றியமையாதது.
- 2013-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு 360 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இலக்கை அடைவது அத்தனை சுலபமில்லை என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இந்திய அணி 44 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதற்கு வெறும் 52 பந்துகளில் விராட் கோலி சதம் விளாசியது முக்கிய காரணமாக அமைந்தது.
- இதே போல 2016-ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை டி-20 போட்டியின் போது அதே ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த நிலையில் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்து இந்தியாவுக்கு வெற்றி பாதைக்கான வழியை காட்டினார் விராட் கோலி.
- அந்த வரிசையில் தான் 2022-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடம் வரை வெற்றி சாத்தியமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த திக் திக் நிமிடங்களை கடந்து கிடைத்த த்ரில் வெற்றிக்கு விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தது காரணமாக அமைந்தது.
சோதனைகளை கடந்து சாதனை!
சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை வாரி குவித்தாலும் விராட் கோலியின் தலைமையில் கீழ் விளையாடிய இந்திய அணிக்கும் எந்த ஐசிசி உலகக் கோப்பை பட்டமும் கிடைக்கவில்லை. அதே போன்று ஐபிஎல் போட்டியில் கோலி தலைமைதாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை கூட டைட்டில் வெல்லவில்லை என்பது அவரது கிரிக்கெட் கேரியரில் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட் கோலி. பின்னர் அவரை ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆனால் இதை பற்றி எல்லாம் பெரிய அளவில் கவனம் செலுத்தாத விராட் கோலி தனி நபராக தொடர்ந்து இந்திய அணிக்கான தனது பங்களிப்பை கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அதனால் தான் இன்றளவும் கிங் கோலியாக கோடிகணக்கான ரசிகர்கள் மனதில் உலா வருகிறார் விராட் கோலி!
அப்துல் ராஃபிக்
கோவை: காரில் இருந்து வெடித்து சிதறியது வெடிபொருட்களா?
கோவை கார் வெடித்து சிதறும் பர பர சிசிடிவி காட்சி!