ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை குறைந்தபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணிகளை பற்றி பார்ப்போம்:
ஸ்காட்லாந்து
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் சார்ஜாவில் நடந்த ஒரு போட்டியில் ஸ்காட்லாந்தை புரட்டி எடுத்த ஆப்கானிஸ்தான் 190/4 எடுத்தது. ஆனால் அதை துரத்திய ஸ்காட்லாந்து அணியால் ஆப்கானிஸ்தான் அணி எடுத்த ரன்னில் பாதியை கூட எடுக்க முடியவில்லை.
ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களான முஜிபுர் ரகுமான் 5 விக்கெட்டுகளையும், ரசித் கான் 4 விக்கெட்டுகளையும் எடுத்து மிரட்டிய மாயாஜால பந்து வீச்சில் 10.2 ஓவரில் வெறும் 60 ரன்களுக்கு சுருண்ட ஸ்காட்லாந்து அணி மோசமான தோல்வியை பெற்றது.
அயர்லாந்து
கடந்த 2010 ஆம் ஆண்டு ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 138/9 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய அயர்லாந்து வெஸ்ட் இண்டீசின் தரமான பந்து வீச்சில் 16.4 ஓவரில் வெறும் 68 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது.
அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக டேரன் சம்மி மற்றும் ரவி ராம்பால் தலா 3 விக்கெட்களை எடுத்து தங்களின் சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்தனர்.
நியூசிலாந்து
2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் 19.2 ஓவரில் வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆனால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி இலங்கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெரத்தின் சிறந்த பந்து வீச்சால் 15.3 ஓவரில் வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்த ஆட்டத்தில் ரங்கனா ஹெரத் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ்
கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி , இங்கிலாந்தின் அடில் ரசித் 4 விக்கெட்டுகளையும் மொயின் அலி 2 விக்கெட்களையும் எடுத்த அற்புதமான பந்து வீச்சில் சிக்கி 14.2 ஓவரில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.
நெதர்லாந்து
கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகள், வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள், மஹீஷ் தீக்சனா 2 விக்கெட்கள் எடுத்து தரமாக பந்து வீசிய இலங்கையிடம் சரணடைந்த நெதர்லாந்து 10 ஓவர்களில் வெறும் 44 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது.
அதற்கு முன்பாகவே கடந்த 2014 ஆம் ஆண்டு அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகள் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் லசித் மலிங்கா 2 விக்கெட்டுகள் எடுத்ததால் இலங்கையிடம் தாக்குப் பிடிக்க முடியாத நெதர்லாந்து 10.3 ஓவரில் வெறும் 39 ரன்களுக்கு சுருண்டு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்களை எடுத்த அணி என்ற அவப்பெயரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
T20 World cup 2022 : நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு!
”பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்” – கடுமையாக சாடிய முன்னாள் வீரர்