டி20 கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஒரு ஓவரில் 17 ரன்கள்
ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கி வைத்தனர். தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி பின்னர் சூடுபிடிக்கத் தொடங்கியது.
10 ஓவர் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. 12வது ஓவரில் அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி அதில் 17 ரன்கள் எடுத்தது.
20 ஓவர் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்கா, 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனஞ்ஜெய டி சில்வா அரைசதம்
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதல் 10 ஓவரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிசங்கா, 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெய டி சில்வா பொறுப்புடன் விளையாடி 42 பந்துகளில் 66 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
குசல் மெண்டிஸ் 25 ரன்கள், அசலங்கா 19 ரன்கள், ராஜபக்சே 18 ரன்கள் எடுத்தனர். 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகளின் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 3வது இடத்திலும் அயர்லாந்து அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.
மோனிஷா
கனமழை எதிரொலி: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!
கே.எல்.ராகுலுக்கு பதில் ரிஷப்புக்கு வாய்ப்பு கொடுக்கலாம்: ஹர்பஜன் சிங்