டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
அந்த வகையில், முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 10) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் வெற்றி பெறும் அணி, நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பதால், இந்தப் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதன்படி, இந்தப் போட்டியில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக கே.எல்.ராகுலும், கேப்டன் ரோகித்தும் களமிறங்கினர்.
இதில் 5 ரன்களில் ராகுல் வெளியேற, ரோகித் சர்மா (27), விராட் கோலி (50) ஹர்திக் பாண்டியா (63) ஆகியோர் சிறந்த பங்களிப்பைத் தந்தனர்.
இதையடுத்து, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில், ஜோர்டான் விக்கெட்டுகளையும், ரஷீத் மற்றும் வோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்டர்களே விக்கெட் விழாமல் அவ்வணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கும் வித்திட்டனர்.
அவ்வணியில் தொடக்க பேட்டராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 80 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க பேட்டர் அலெக்ஸ் ஹேர்லெஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 86 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே இங்கிலாந்து அணியும் மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதில் இவ்விரு அணிகளும் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன. இதில், இந்த முறை கோப்பையை வெல்லும் அணி, ஏற்கெனவே இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றிருக்கும் மேற்கிந்திய தீவுகளின் சாதனையை சமன் செய்யும்.
ஜெ.பிரகாஷ்
அவரிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்: ஹர்பஜன் சிங்
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு!