டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
அந்த வகையில், முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 10) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.
இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக கே.எல்.ராகுலும், கேப்டன் ரோகித்தும் களமிறங்கினர். இதில் 5 ரன்களில் ராகுல் வெளியேற, ரோகித்துடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி கைகோர்த்தார்.
இருவரும் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தபோது, ரோகித் சர்மா 4 பவுண்டரிகள் உதவியுடன் 27 ரன்களில் அவுட்டானார். வேங்கை விராட் கோலி 40 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.
கடந்த போட்டியில் கதிகலங்கவைத்த சூர்யகுமார் யாதவ், இந்த முறை 14 ரன்களில் ஏமாற்றினார். என்றாலும், அதில் 1 சிக்ஸரையும் 1 பவுண்டரியையும் விரட்டியிருந்தார்.
மறுமுனையில் நங்கூரமாய் நிலைத்து நின்று ஆடிய ஹர்திக் பாண்டியா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உதவியுடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில், ஜோர்டான் விக்கெட்டுகளையும், ரஷீத் மற்றும் வோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்தியா நிர்ணயித்திருக்கும் 169 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
ஜெ.பிரகாஷ்
“நாங்க வந்துட்டோம்… நீங்க எப்படி?”: அக்தர்
அவரிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்: ஹர்பஜன் சிங்