2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் மோதும் விதம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் அணிகள் மோதும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை நடைபெற்ற தொடர்களில், தொடக்கத்தில் முதல் சுற்றும், அடுத்து சூப்பா் 12 சுற்றும், பின்னா் அரையிறுதி, இறுதி ஆட்டங்களும் நடைபெற்றன. ஆனால், 2024ஆம் ஆண்டு போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு சூப்பா் 8 சுற்று, அடுத்து அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதாவது, பங்கேற்கும் 20 அணிகள், தலா 5 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்படவுள்ளன. முதல் சுற்று நிறைவடைந்த பிறகு, அதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறும். அங்கு அவை, குரூப்புக்கு 4 அணிகள் வீதம் 2 குரூப்களாக பிரிக்கப்படும்.
அந்த இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். அதிலிருந்து முன்னேறுபவை இறுதி ஆட்டத்தில் விளையாடும். 2024 உலகக் கோப்பை போட்டிக்கு ஏற்கெனவே 12 அணிகள் (அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதொ்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்) நேரடியாகத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் 8 அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் இறுதி செய்யப்படவுள்ளன.
ஜெ.பிரகாஷ்