ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகள் எடுத்த 185 ரன்களே, சில அணிகளின் அரையிறுதி கனவை தகர்த்துள்ளன.
டி20 கிரிக்கெட் என்றாலே சுவாராஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. அதிலும் இறுதி ஓவரின் கடைசிப் பந்து வரை ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறவைக்கும். ஏன், களத்தில் நிற்கும் வீரர்களுக்கும் அடிவயிற்றைக் கலக்கவே செய்யும்.
மேலும், சில மணி நேரத்திலேயே அப்போட்டிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விடுவதால், டி20 கிரிக்கெட் இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாது பல முதியவர்களின் இதயங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பையில் நிகழ்ந்த, நிகழும் சுவாரஸ்யங்கள் கணக்கில் அடங்காதவை. டி20யில் கலக்கி, பல கோப்பைகளை வென்ற வலிமையான அணிகளைக்கூட, இன்றைய கத்துக்குட்டி அணிகள் வென்று சாதனை படைத்து வருகின்றன என்பது எல்லோருக்கும் ஆச்சர்யம் தரும் செயல்.
அதற்கு உதாரணமாக இந்த உலகக்கோப்பையில் நிகழ்ந்தேறிய பல போட்டிகளைச் சுட்டிக்காட்டலாம். அதன்படி, சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த சில கத்துக்குட்டி அணிகளும் உண்டு. அவ்வணிகளே பலமிக்க அணிகளுக்கு எதிராகப் போராடி, அவ்வணிகளையே பயமுறுத்துவதுதான் தற்போதைய சுவாரஸ்யமாக இருக்கிறது.
அந்த வகையில், தற்போது டி20 உலகக்கோப்பையின் போட்டிகள் அடுத்தகட்டத்தை நெருங்கியுள்ளன. ஆம், அரையிறுதியில் மோதுவதற்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு குரூப்பிலிருந்தும் சில அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தன.
அதேநேரத்தில் மற்ற அணிகள் மழையினாலும், தோல்வியினாலும் புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தாலும், தற்போது அவ்வணிகளே முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் அணிகளுக்கும் போட்டியாக வந்து நிற்கின்றன.
ஆனால், இரண்டு குரூப்களில் இருக்கும் அணிகளில் யார் அரையிறுதியில் மோதப் போகிறார்கள் என்பது கடைசி லீக் போட்டியின் முடிவைப் பொறுத்தே தெரியவரும்.
குரூப் 1இல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், குரூப் 2 இல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
நியூசிலாந்தும், இங்கிலாந்தும் குரூப் 1இல் இருந்தும், இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் குரூப் 2இல் இருந்தும் அரையிறுதியில் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி நடைபெற்ற ஆட்டங்களால் அரையிறுதியை நெருங்கிய அணிகளுக்கே சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
மேலும், இப்போட்டிகளில் ஒரு சுவாரஸ்யமும் அடங்கியுள்ளது. ஆம், நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்திருந்தது.
அதேபோல் நவம்பர் 4ம் தேதி (இன்று) நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கான போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்து. அதாவது, அந்த இரு தினங்களில் முதலில் விளையாடிய இரு அணிகளும் 185 ரன்களையே எடுத்திருந்தன.
இதற்குமுன் (நவம்பர் 2) வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய இந்தியாவும் 185 ரன்களை அவ்வணிக்கு இலக்காக வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 185 ரன்களுக்கு 1 ரன் குறைவாக 184 ரன்கள் எடுத்திருந்தது.
இதில் கடந்த 3 நாட்களில் 3 வெவ்வேறு அணிகளும் 180 ரன்களுக்கு மேல் எடுத்ததுதான் சுவாரஸ்யம். அதிலும், முதலில் பேட் செய்த அணிகளே இந்த ரன்களை எடுத்துள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றியின் இலக்கை நோக்கி இரண்டாவதாக களமிறங்கிய மற்ற அணிகள் எல்லாமே தோல்வியைத் தழுவின.
இதில் முக்கிய விஷயமாக, பாகிஸ்தான் இந்த உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதுடன் அரையிறுதிக்கான கனவிலும் உறுதியாய் இடம்பிடித்துள்ளது.
இதனால், இந்திய அணிக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
அதுபோல் இங்கிலாந்திடம் வீழ்ந்த நியூசிலாந்து இன்றைய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய பிறகு, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் இடம்பிடித்து அரையிறுதியை உறுதி செய்துள்ளது. ஆக, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தகட்டத்திற்குச் செல்ல உதவியாக இருந்ததே இந்த 185 ரன்கள்தான்.
இந்த ரன்கள் இவ்வுலகக்கோப்பை மட்டுமல்லாது இன்னும் எண்ணற்ற போட்டிகளில் பல அணிகளுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. இந்த ரன்களின் வித்தியாசத்தில்கூட எத்தனையோ அணிகள் வென்றிருக்கின்றன. ஏன், சில பேட்டர்கள்கூட தங்கள் இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து சாதனையாக வைத்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
T20 Worldcup 2022 : அயர்லாந்தை விரட்டியடித்த நியூசிலாந்து!
ஹாட்ரிக் விக்கெட்: உலக சாதனை படைத்த அயர்லாந்து வீரர்!