நியூசிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இன்றைய (நவம்பர் 4) ஆட்டத்தில் அயர்லாந்தை 35 ரன்களில் வீழ்த்தியது நியூசிலாந்து.
டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. புள்ளிப் பட்டியலில் சில அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
மீதமுள்ள மற்ற அணிகளோ, இறுதிப்போட்டி வரை விட்டுக் கொடுக்காமல் போராடுவோம் என்று விளையாடி வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் குரூப் 1 பிரிவைச் சேர்ந்த நியூசிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடியது.
அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் இவருடன சீரான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
துவக்க வீரர் பின் ஆலன் 18 பந்துகளில் 33 ரன்கள் அடித்துச் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கான்வே 28 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 17 ரன்கள் மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டைரல் மிச்சல் 31 ரன்கள் அடித்திருந்தனர்.
அயர்லாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ்வா லிட்டில் நான்கு ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங் மற்றும் பால்பெர்னே தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங் 37 ரனகள் மற்றும் பால்பெர்னே 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து நிற்காமல் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதையடுத்து, நியூசிலாந்து தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்றே கூறலாம்.
டி20 குரூப் 1 புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மோனிஷா
15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ஜமேஷா முபின் குறித்து அவரது மனைவி சொல்வது என்ன?