நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுப் போட்டி இன்று (அக்டோபர் 29) நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்குள் நுழைவதற்கான சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தீவிரமாக விளையாடி வருகிறது.
12 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
ஒவ்வொரு அணியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இறுதி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடுவதால் பரபரப்பிற்குப் பஞ்சமின்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய (அக்டோபர் 29) சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன. சிட்னியில் பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டிகள் துவங்கி நடைபெறவுள்ளன.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த 26 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவிருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
தற்போது நியூசிலாந்து அணி தனது பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு நியூசிலாந்துக்கு பிரகாசமாகி விடும்.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது.
ஆகையால் இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. நியூசிலாந்திற்கு எதிரான இந்த ஆட்டத்தில் இலங்கை தோற்றால் உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற வேண்டியது வரும்.
இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் இதுவரை 1, 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் 5 உலகக் கோப்பை தொடரிலும் என மொத்தமாக 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
இதில் 11 முறை நியூசிலாந்து அணியும் 10 முறை இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மோனிஷா
முதல்வரின் பசும்பொன் பயண திட்டம் ரத்து!
”பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்” – கடுமையாக சாடிய முன்னாள் வீரர்