அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் இரண்டு விக்கட்டுகள் வேகமாக விழ ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள், சஞ்சு சாம்சன் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்கள்.
இந்த நிலையில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரிங்குசிங் முதல் பதினைந்து பந்துகளில் 15 ரன்கள் எடுத்து, அடுத்த ஆறு பந்துகளில் 23 ரன்கள் என மொத்தமாக 38 ரன் எடுத்துக் கொடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியின் அதிரடி காரணமாக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா, “வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் விளையாடும் போது மைதானம் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.
இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. பிளேயிங் லெவனை தேர்வு செய்வது பெரும் தலைவலி தான், ஆனால் அதனை சுகமான தலைவலியாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு வீரரும் ஆர்வத்துடனும், மன உறுதியுடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால், கிரிக்கெட்டுக்கு சரி வராது. எதிர்பார்ப்புகளை ஓரம் வைத்து சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருப்பதி நவம்பர் மாத தரிசனம்: எந்த தேதியில் எதற்கான டிக்கெட்டை பெறலாம்?
டி20: தொடரை வென்றது இந்திய அணி!