சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி எதிர்பாராத திருப்பங்களுடன் ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி, நாளை (அக்டோபர் 30) தன்னுடைய 3வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்திக்க உள்ளது.
தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும். அதிலும் பெர்த் ஆடுகளம் உலகின் அதிவேக வேகப்பந்து மைதானம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், ”நாங்கள் உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணி” என தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ஜே தெரிவித்துள்ளார்.
இன்று (அக்டோபர் 29 ) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ”உலகக்கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணிகளில் நாங்களும் ஒன்று.
இந்தியாவிற்கு எதிராக எங்களுடைய முழு திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுவோம். எங்கள் அணியில் விதவிதமாக பந்து வீசும் வீரர்கள் இருக்கின்றனர். நாங்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணி.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரைக்கும் நாங்கள் எங்களுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து விளையாடுவோம். எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் நாளில் நாங்கள் எங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, வெற்றிபெற முயற்சிப்போம்.
அத்துடன் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம். நாளைய போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதன்மீது கவனம் செலுத்துவோம். பெர்த் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளை வைத்து பார்க்கும்போது, சிறந்த ஆடுகளமாக தெரிகிறது.
அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ளது. நாளைய போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை குறித்து உறுதியாக கூற இயலாது” என்று கூறியுள்ளார் நோர்ஜே.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் உதயநிதி
இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!