அனைவரும் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று (அக்டோபர் 23 ) நடைபெறுகிறது.
இந்நிலையில் , இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு வரலாற்று புள்ளிவிவரத்தை பார்க்கலாம்.
இந்திய அணி
உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருக்கும் இந்திய அணியில் பும்ரா காயத்தால் விலகியது மட்டுமே பின்னடைவாகும். ஏனெனில் சூர்யகுமார், பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரால் மிடில் ஆர்டர் மற்றும் ராகுல், ரோஹித், விராட் ஆகியோரால் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.
அதே போல் ஸ்பின் மற்றும் ஆல் ரவுண்டர்கள் துறையில் அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். எனவே பும்ரா இல்லாத நிலையில் அந்த பொறுப்பை ஏற்றுள்ள புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வேகப்பந்து வீச்சு துறையை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பாகிஸ்தான் அணி
சாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளது பாகிஸ் தான் அணிக்கு பெரிய பலமாகும். அவருடன் ஹரிஷ் ரவூப், நசீம் ஷா என வலுவான பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள அந்த அணியில் சுழல் பந்து வீச்சு மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் ஆகிய இரண்டும் பலவீனமாக உள்ளது.
அதனால் டாப் ஆர்டரில் பாபர் – ரிஸ்வான் ஜோடி அடித்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலைமை அந்த அணியில் உள்ளது. எனவே கடந்த வருடம் போலவே இம்முறையும் வெற்றி பெற பாகிஸ்தான் முயற்சிக்க உள்ளது.
புள்ளிவிவரங்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் வென்று இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் வென்றுள்ளது.
குறிப்பாக, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 6 போட்டிகளில் 5 இல் வென்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் 1 போட்டியில் மட்டும் வென்றுள்ளது.
கடைசி 3 போட்டிகளில் பாகிஸ்தான் 2 வெற்றியும் இந்தியா 1 வெற்றியும் பெற்றுள்ளன. மேலும் இம்முறை வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.
இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 பேட்ஸ்மேன்களின் பட்டியல்: விராட் கோலி : 406* , முஹம்மது ரிஸ்வான் : 193* , சோயப் மாலிக் : 164.
இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 போட்டிகளில் இதுவரை யாரும் சதமடித்ததில்லை என்ற நிலைமையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்: முஹம்மது ரிஸ்வான் : 79*, 2021, விராட் கோலி : 78*, 2014, கௌதம் கம்பீர் : 75, 2007.
இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 பவுலர்கள்: உமர் குல் : 11, புவனேஸ்வர் குமார் : 10, ஹர்திக் பாண்டியா : 8.
இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் யாருமே இதுவரை 5 விக்கெட் எடுத்ததில்லை என்ற நிலையில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள டாப் 3 பவுலர்கள்: முகமது ஆமீர் : 4/18, புவனேஸ்வர் குமார் : 4/26, உமர் குல்: 4/37
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 உலகக்கோப்பை: சாம் கரன் வேகத்தில் சாய்ந்தது ஆப்கானிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்த நியூசிலாந்து!