ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையின் 37 வது லீக் போட்டி, ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ( நவம்பர் 4 ) நடைபெற்றது.
இப்போட்டியில் அயர்லாந்து அணியுடன் நியூசிலாந்து அணி மோதியது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 185/6 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு 52 ரன்கள் எடுத்து, அதிரடியாக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 32 (18) ரன்களில் அவுட்டாக, மறுபுறம் தடுமாறிய டேவோன் கான்வே 28 (33) ரன்களில் நடையை காட்டினார்.
அப்போது வந்த கிளன் பிலிப்ஸ் 17 (9) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புணர்ந்து பேட்டிங் செய்து தனது அணியை வலுப்படுத்தினார்.
குறிப்பாக 6 வது ஓவரில் களமிறங்கிய அவர், 19 ஓவர்கள் வரை சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 61 (35) ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோஸ் லிட்டில் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சாதனை படைத்த ஜோஸ் லிட்டில்
அப்போது களமிறங்கிய ஜிம்மி நீசம் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி சென்றார்.
அடுத்ததாக வந்த மிட்சேல் சாட்னரையும் அதே போல எல்பிடபிள்யூ செய்த ஜோஸ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்து நியூசிலாந்தை 200 ரன்களை தொட விடாமல் செய்தார்.
அதை தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு,
பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ஆண்டி பால்பிரின்,
3 சிக்சருடன் 30 (25) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே பால் ஸ்டிர்லிங் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 37 (27) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது நியூசிலாந்து அணி.
அதனால் 20 ஓவர்களில் 150/9 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து, இந்த உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது.
இருப்பினும் டி20 உலகக்கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 2 வது அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஜோஸ் லிட்டில்,
ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 6 வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ட்விட்டர் அலுவலகம் மூடப்படுகிறது: அதிர்ச்சியில் ஊழியர்கள்!
T20 Worldcup 2022 : அயர்லாந்தை விரட்டியடித்த நியூசிலாந்து!