கடந்த மாதம் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை அதன் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (நவம்பர் 13) நடக்க உள்ள இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த அணிகளான பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
மீண்டு எழுந்த பாகிஸ்தான்
சூப்பர் 12 சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி பாகிஸ்தான் விமர்சனத்திற்கு உள்ளானது. எனினும், அடுத்த 3 போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியது.
மேலும் தென்னாப்பிரிக்காவின் தோல்வியும் பாகிஸ்தான் அரையிறுதியில் செல்ல பெரும் உதவிபுரிந்தது.
எனினும் நவம்பர் 9ம் தேதி நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அட்டகாசம் செய்த பாகிஸ்தான், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதிரடியால் அதிரவிடும் இங்கிலாந்து
அதேபோல் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர்12 சுற்றில் மூன்று அபாரமான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
நவம்பர் 10ம் தேதி நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில், பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அபாரமாக செயல்பட்டது இங்கிலாந்து.
இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (80* ரன்), அலெக்ஸ் ஹேல்ஸ்(84* ரன்) ஆகியோரின் அசுரத்தனமான அதிரடியால் 16வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி எட்டிபிடித்தது.
இதன் மூலம் கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு சென்ற இங்கிலாந்து, இந்தியாவின் உலகக்கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பாபர் – ரிஸ்வான் கூட்டணி!
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அந்த அணியின் தொடக்கவீரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் பேட்டிங்கை நம்பியே உள்ளது. அதற்கேற்ப சூப்பர் 12 ஆட்டங்களில் சொதப்பிய இருவரும், அரையிறுதியில் அடித்த அரைசதத்துடன் தங்களது பழைய பார்முக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு பக்கபலமாக, பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது ஹாரிஸ் என பெரும் படையே உள்ளது.
அதேபோல், பந்துவீச்சிலும் பாகிஸ்தான் அணி பலமாகவே காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்பும், சுழற்பந்து வீச்சில் ஷதப் கான், முகமது நவாஸ்சும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதன்மூலம் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் பாகிஸ்தான் அணி தரம் வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது.
பயமுறுத்தும் பவர்ஹிட்டர்கள்!
அதேபோல் இங்கிலாந்து அணியும் பேட்டிங், பெளலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறந்த அணியாகவே கருதப்படுகிறது.
அந்த அணியின் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலியும் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.
அதேபோல், பந்து வீச்சில் சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் மிரட்டுகிறார்கள்.
அவர்களுக்கு பலவீனமாக, முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் மலான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோரின் காயம் ஆகியவை காணப்படுகிறது.
மழைக்கு நடுவே மல்லுகட்டு!
அவர்கள் இறுதிப்போட்டியில் பங்குபெறும் பட்சத்தில் அந்த அணி, பலம் வாய்ந்த பாகிஸ்தானுக்கு 100 சதவீதம் அச்சுறுத்தும் அணியாகவே இருக்கும்.
அதே வேளையில் மெல்போர்னில் இன்று இந்திய நேரப்படி 1.30 மணிக்கு துவங்கும் இறுதிப்போட்டிக்கு உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கப்போவது மழைதான். ஏனெனில் இன்று அங்கு 95 சதவீதம் மழைபெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவே ஆஸ்திரேலியா வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு, எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்த போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
மேலும் 3வது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள இரு அணிகளும், இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற கடைசிவரை களத்தில் மல்லுக்கட்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
என்டிடிவிக்காக அதானி போடும் ஸ்கெட்ச்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!