2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு இந்த ஆண்டு (தற்போது நடைபெற்று வரும்) உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய 8 அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. குரூப் 1இல் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் நியூசிலாந்து அணி, வரும் 9ஆம் தேதி குரூப் 2இல் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
அதுபோல் குரூப் 2இல் முதல் இடம் பிடித்திருக்கும் இந்திய அணி, குரூப் 1இல் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் இங்கிலாந்தை வரும் 10ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகள் இணைந்து நடத்த இருக்கின்றன.

இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன.
இதில், (தற்போது நடைபெற்று வரும்) உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய 8 அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன. அதாவது, தற்போதைய உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலகக் கோப்பை நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நெதர்லாந்து அணி நேரடியாகத் தகுதி பெற்றிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
இந்த 10 அணிகளுடன் ஐசிசி தரவரிசையில் மேலே உள்ள வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. 12 அணிகள் இதுபோல நேரடியாகத் தேர்வாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன.
இந்தமுறை சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி அதன் வழியாகவே உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற முடியும். இதையடுத்து, ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதிச் சுற்றில் 1 அணி, ஆசிய தகுதிச் சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதிச் சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.
ஜெ.பிரகாஷ்
அர்ஜுனா விருது: பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!