டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், சிஎஸ்கே வீரருமான மேத்தீவ் ஹைடன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் முதன்முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக மேத்தீவ் ஹைடன் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக பேசிய அவர், “இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அது நிச்சயம் நல்ல முடிவாக நான் கருதுகிறேன். மேற்கிந்திய தீவுகள் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நிச்சயமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அமெரிக்காவை பற்றி என்னால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.
இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்கும்போது அனுபவமும், அதிரடியும் கலந்த தன்மை உடைய வீரர்களாக இருக்கிறார்கள்.
மேலும், வலது கை பேட்ஸ்மேன்கள், இடது கை பேட்ஸ்மேன்கள் ஆகியவர்கள் முதல் 3 இடத்தில் உள்ளனர். இது நிச்சயமாக இந்தியாவிற்கு கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும்.
ரோகித் சர்மா ஏற்கனவே தன்னை ஒரு தலைவராக நிரூபித்துவிட்டார். பல தொடர்களில் அவர் வெற்றிகரமாக அணியை வழி நடத்தி வந்திருக்கிறார்.
இதேபோன்று பும்ரா, சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். இதை நிச்சயம் நல்ல தேர்வாக நான் கருதுகிறேன். நடராஜன் போன்ற வீரர் இறுதிக்கட்டத்தில் இருந்திருந்தால் அது இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
அவர் ஐபிஎல் தொடரில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பேட்டிங் வரிசையை பார்த்தாலே உலகத்தரம் வாய்ந்த வித்தியாசமான ஷாட்களை ஆடக்கூடியவர் என்பது தெரிகிறது.
சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் மற்ற வீரர்களைவிட வித்தியாசமாக விளையாடுவார்கள். இதேபோன்று ஜடேஜா,அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளனர். உலக கோப்பையை வெல்ல வேண்டிய மன வலிமை இருக்க வேண்டும் . அது இந்தியாவிடம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சீட் பெல்ட் அணியவில்லை: நெல்லை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!
கெஜ்ரிவால் பிரச்சாரம் கைகொடுத்ததா? டெல்லி மக்களின் மனநிலை என்ன?