T20 World Cup 2024 – Super 8: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஜூன் 2 அன்று துவங்கியது. இந்த தொடரில் 20 அணிகள் பங்குபெற்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் என அந்த 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டன. அதனையடுத்து ஒவ்வொரு அணியும் தங்களது குழுவில் இடம்பெற்றுள்ள அணிகளுடன் மோதும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
‘குரூப் ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இப்பிரிவில் இடம்பெற்றிருந்த முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்ததை அடுத்து, இந்த தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறியுள்ளது.
‘குரூப் பி’ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ரன்-ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
‘குரூப் சி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 2 அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த 2 அணிகளுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்த அனுபவம் வாய்ந்த அணியான நியூசிலாந்து, இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அதேபோல, ‘குரூப் டி’ பிரிவில் இருந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் வங்கதேசத்துக்கும், நெதர்லாந்துக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் நேபாளத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வென்றதன் மூலம் வங்கதேசம் அடுத்த சுற்றுக்கு நகர்ந்துள்ளது.
சூப்பர் 8 எப்படி இருக்கும்?
தற்போது, ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், ‘குரூப் 1’ பிரிவில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘குரூப் 2’ பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன.
‘சூப்பர் 8’ சுற்று அட்டவணை!
ஜூன் 19 – அமெரிக்கா vs தென் ஆப்பிரிக்கா – ஆன்டிகுவா
ஜூன் 20 – இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் – செயின்ட் லூசியா
ஜூன் 20 – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – பார்படாஸ்
ஜூன் 21 – ஆஸ்திரேலியா vs வங்கதேசம் – ஆன்டிகுவா
ஜூன் 21 – இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா – செயின்ட் லூசியா
ஜூன் 22 – அமெரிக்கா vs மேற்கிந்திய தீவுகள் – பார்படாஸ்
ஜூன் 22 – இந்தியா vs வங்கதேசம் – ஆன்டிகுவா
ஜூன் 23 – ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா – செயின்ட் வின்ஸ்டன்
ஜூன் 23 – அமெரிக்கா vs இங்கிலாந்து – பார்படாஸ்
ஜூன் 24 – தென் ஆப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள் – ஆன்டிகுவா
ஜூன் 24 – ஆஸ்திரேலியா vs இந்தியா – செயின்ட் லூசியா
ஜூன் 25 – வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் – செயின்ட் வின்ஸ்டன்
இப்போட்டிகளை தொடர்ந்து, 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் ஜூன் 26 மற்றும் 27 அன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும். அதில் வெற்றி பெறும் அணிகள் பார்படாஸில் உள்ள கென்ஷிங்டன் மைதானத்தில் வரும் ஜூன் 29 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக மோதிக்கொள்ளும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
முகூர்த்த நாளில் குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
பக்ரீத் : மோடி, ராகுல், கமல், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!