WI vs PNG: 2024 டி20 உலகக்கோப்பையின் 2வது லீக் போட்டியில், பப்புவா நியூ கினியா அணியை மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
கயனாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ரோவ்மேன் பாவெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைதொடர்ந்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, பவர்-பிளே முடிவில் 3 விக்கெட்களை இழந்து 34 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
ஆனால், சேசே பவ் பொறுப்பாக விளையாடி 50 (43) ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்திருந்தது. அவருக்கு துணையாக கிப்லின் டோரிகா 27 (18) ரன்கள் மற்றும் கேப்டன் அஸ்ஸாத் வாலா 21 (22) ரன்களும் சேர்த்திருந்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு ஆன்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
137 ரன்கள் என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் எளிதாக எட்டிவிடும் என எண்ணப்பட்ட நிலையில், அந்த அணிக்கு கடும் நெருக்கடியை பப்புவா நியூ கினியா பந்துவீச்சாளர்கள் அளித்தனர். 2வது ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரர் ஜான்சன் சார்லஸ் டக்-அவுட் ஆனார்.
அடுத்து வந்த நிகோலஸ் பூரான் 27 (27) ரன்கள் சேர்த்து வெளியேற, மற்றோரு துவக்க ஆட்டக்காரரான பிராண்டன் கிங் 34 (29) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, அந்த அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ரோவ்மேன் பாவெல் 15 (14) ரன்களுக்கும், ஷெர்பேன் ரூதர்போர்ட் 2 (7) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக, 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு சென்றது. 17வது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் 9 ரன்கள் மட்டுமே சேர்க்க, 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என நிலை மாறியது.
அடுத்த 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆன்ட்ரே ரசல், 19வது ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி இலக்கை கடந்து அழைத்து சென்றனர்.
கடைசி வரை கடுமையாக போராடிய பப்புவா நியூ கினியா, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணிக்காக கேப்டன் அஸ்ஸாத் வாலா 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் திருவுருவ படத்திற்கு டெல்லியில் மரியாதை : ராகுல், சோனியா புகழாரம்!
அரண்மனை- 4 முதல் கருடன் வரை…. மே மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?