Rohit Sharma: 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டி, ஜூன் 5 அன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 96 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின், ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 3 சிக்ஸ், 4 ஃபோர் உட்பட 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் விளாசிய 3 சிக்ஸ்கள் மூலம், சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், டி20 இணைந்து) 600 சிக்ஸ்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்த இலக்கை அவர் 498 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.
இந்த பட்டியலில், இவருக்கு அடுத்தபடியாக 553 சிக்ஸ்களுடன் கிறிஸ் கெய்ல் 2வது இடத்திலும், 476 சிக்ஸ்களுடன் ஷாஹித் அப்ரிடி 3வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த பட்டியலில் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாமல் உள்ள வீரர்களில், ரோகித் சர்மாவுக்கு அடுத்த ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் இதுவரை 330 சர்வதேச சிக்ஸ்களை விளாசியுள்ளார்.
இதை தொடர்ந்து, இன்றைய ஆட்டத்தில் 52 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4,000 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி, பாபர் அசாமை அடுத்து, இந்த மைல்கல்லை எட்டும் 3வது வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
https://x.com/BCCI/status/1798394996242198642/
அதுமட்டுமின்றி, பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 4,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
மேலும், விராட் கோலி மற்றும் மகேல ஜயவர்தன ஆகியோரை அடுத்து, டி20 உலகக்கோப்பை ஆட்டங்களில் 1,000 ரன்கள் சேர்த்த 3வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
மேலும், இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம், இந்திய அணியின் கேப்டனாக அதிக டி20 போட்டிகளில் வென்ற தோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். தோனி இதுவரை 41 டி20 போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்தி சென்ற நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 42 வெற்றிகளை பெற்றுள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஆஸ்துமாவுக்கு எந்தவிதமான சிகிச்சையை எடுத்துக்கொள்கிறீர்கள்?
“ராஜினாமா செய்யப் போறேன்” : அண்ணாமலை பரபரப்பு!
பியூட்டி டிப்ஸ்: உடல்பருமனைப் பற்றி கவலைப்படாதவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் வரை!