சுமார் 6,000 கி.மீ. நீளத்தில் 10 வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
மத்திய ரயில்வே துறையானது மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 10 வழித்தடங்களில் சுமார் 6,000 கி.மீ. நீளத்துக்கான ரயில்பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
அதிவேகமான புல்லட் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செயல்திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி – மும்பை, டெல்லி-கொல்கத்தா, டெல்லி-அமிர்தசரஸ், பாட்னா-கொல்கத்தா, சென்னை –பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்கள் இதில் அடங்கும். இதனைச் செயல்படுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அகமதாபாத் – மும்பை இடையிலான அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான பணிகளே நடந்து வருகிறது. உலக வங்கி, ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றின் உதவியுடன் இந்த புல்லட் ரயில் வழித்தடப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.