பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா இன்று (ஜனவரி 9) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் தற்போது 50 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதுவரை சாதி அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் நேற்று (ஜனவரி 8) அறிமுகம் செய்தார். சட்டப் பிரிவு 15 மற்றும் 16ஆம் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் மசோதா மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. மாலை 6 மணிக்குத் தொடங்கிய விவாதம் இரவு 10 மணி வரை நீடித்தது. மசோதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உட்பட 323 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக 3 சதவிகித வாக்குகள் பதிவாகின.
அதிக எம்.பி.க்கள் ஆதரவு அளித்த நிலையில், 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்காக, நேற்றுடன் முடிவடைந்த மாநிலங்களவை இன்று வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடந்த வகையில் ஒவ்வொரு ஏழையும் சமவாய்ப்புகளைப் பெற்று கண்ணியமான வாழ்க்கையை அடைய முடியும்” என்று தெரிவித்தார்.
அதுபோன்று மசோதாவுக்கு ஆதரவு அளித்த எம்.பி.க்கள் அனைவருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவைக் கூடியதும் மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று, அதன் பிறகே மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் மாநிலங்களவை நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.