முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டால் 2019-20 கல்வியாண்டில் 500 பேர் வரை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு ஜனவரி 8ஆம் தேதி மக்களவையிலும், 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இதையடுத்து 2019-20 கல்வியாண்டில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் தயாராகியுள்ளன.
ரூர்க்கி ஐஐடியின் இயக்குநர் சதுர்வேதி இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு வழங்கப்படும் இந்த இடஒதுக்கீட்டால் இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 500 வரை உயரும். இது கிட்டத்தட்ட 4 விழுக்காடாகும். டெல்லி ஐஐடியைச் சேர்ந்த சித்தார்த் பாண்டே கூறுகையில், “டெல்லி ஐஐடி இந்த ஆண்டு 5.6 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்துகிறது. ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் இந்த ஆண்டு 105 இடங்கள் உயர்த்தப்படுகிறது” என்றார்.
சென்னை ஐஐடியைப் பொறுத்தவரையில் முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு இந்த ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல கான்பூர் ஐஐடி 3 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
