பத்து வருட இடைவெளிக்குப் பின் இளையராஜா இசையில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகரான பின், தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த ‘திமிரு புடிச்சவன்’ என்ற படம் கடைசியாக வெளிவந்தது.
தற்போது விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான தாஸ் திரைப்படத்திற்கு பின் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி படத்திற்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்கிறார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பிறகு இளையராஜாவின் ஹிட் காம்போவான கே.ஜே.ஜேசுதாஸ் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த பழசிராஜா படத்திற்குப் பிறகு இணைந்து பணிபுரியவில்லை. இந்நிலையில் 10 வருடம் கழித்து தமிழரசன் படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
இளையராஜா தன் பாடல்களுக்கு ராயல்டி கேட்பதால், அவர் இசையமைத்த பாடல்களை கச்சேரிகளில் பாடுவதில்லை என முன்னர் ஜேசுதாஸ் அறிவித்திருந்தார். பாடகர்களுக்கு முக்கியத்துவமளிக்காமல் இசையமப்பாளரே முழு உரிமை கோருவதில் உடன்பாடில்லை எனவும் பாடல் என்பது கூட்டு முயற்சி எனவும் தன் கருத்தை ஜேசுதாஸ் தெரிவித்திருந்தார். தற்போது இவர்களிருவரும் ஒரு பாடலுக்கு இணைந்துள்ளது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
எஸ்என்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பணிபுரிகிறார்.