விவசாயிகளின் நெருக்கடியைப் போக்க ரூ.500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகிய வேளாண் பொருட்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடியைப் போக்க ரூ.500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு நிதிநிலைக் குழுவின் ஒப்புதலுக்காக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் காத்துக்கொண்டிருக்கிறது. இத்திட்டம், நடப்பு ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டதாகும். விவசாயிகளின் ஊதியத்தை உயர்த்துவதையும், ஒருங்கிணைக்கப்பட்ட விநியோக அமைப்புகளை உருவாக்குவதையும், விலை ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து உணவு பதப்படுத்துதல் துறைச் செயலாளரான ஜக்திஷ் பிரசாத் மீனா தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இத்திட்டத்தை இறுதி செய்யும் தருவாயில் நாங்கள் இருக்கிறோம். நிதிநிலைக் குழுவிடம் இத்திட்டம் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான ஒப்புதல் பெற்ற பிறகு ஜூலை மாதத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தால், தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றைச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதோடு, விவசாயிகள், உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவது, அறுவடைக்குப் பிறகான இழப்புகளைக் குறைப்பது, உணவு பதப்படுத்துதல் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, விநியோக அமைப்புக்கு வேளாண் சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவது, நுகர்வோருக்கு விலை ஏற்ற இறக்கப் பிரச்சினைகளைக் குறைப்பது ஆகியன சாத்தியமாகும்” என்று கூறினார்.