நடிகைகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாடல்கள் போன்றோர் குளிர்பானங்கள், தின்பண்டங்களுக்கான விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். சிலர் தேர்ந்தெடுத்த பொருட்களுக்கு மட்டும் விளம்பரம் செய்வர். சிலர் விளம்பரங்களிலேயே நடிக்காமல் ஒதுங்கியிருக்கின்றனர். இதை ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாக எடுத்துக்கொள்ளலாம். எனினும், உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதாகச் சிலர் விமர்சனங்களை சந்தித்துள்ளனர். கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின்போது, புதிய சிப்ஸ் நிறுவனம் ஒன்றின் விளம்பரங்களில் விராட் கோலி நடித்தார். அதற்காகக் கடும் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். அந்த வரிசையில் தற்போது நடிகை சமந்தாவும் விமர்சன வலையில் சிக்கியுள்ளார்.
அண்மையில் பிரபல நிறுவனமொன்றின் தின்பண்டத்திற்கு விளம்பரம் செய்ய சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார். அதற்காக ட்விட்டரில் விளம்பரமும் செய்தார். இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ‘குப்பை உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளுக்கு விளம்பரம் செய்யலாம்’ எனச் சிலரும், ‘உங்களுக்கு பணம் வேண்டுமென்றால் சினிமா டிக்கெட் வாயிலாகத் தருகிறோம், இதுபோன்ற பொருட்களுக்கு விளம்பரம் செய்யாதீர்கள்’ என சிலரும் கருத்து தெரிவித்தனர். அதேபோல ஒருவர், “விளம்பரம் படம் பிடிக்கப்பட்ட நாளில் குறைந்தபட்சமாக ஒரு முழு குர்குரே பாக்கெட்டையாவது சமந்தா சாப்பிட்டாரா என தெரியவில்லை. நடிகைகளும் மாடல்களும் சாலடுகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக்கொண்டு உடல்நலத்துக்குக் கேடான தின்பண்டங்களை மற்றவர்களுக்கு ஊக்குவிக்கின்றனர்” என்று கருத்து தெரிவித்தார்.
இந்த ட்வீட்டுக்கு சமந்தா அளித்துள்ள பதில் ட்வீட்டில், “ஆம் நான் சாப்பிட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உண்ணும் உணவின் படத்தை உங்களிடம் நிச்சயம் பகிர்ந்துகொள்கிறேன். நான் ஆரோக்கியமான உணவுகளைத்தான் உண்கிறேன். ஆனால் சில நாட்களில் மற்றவர்களைப் போலவே நானும் குர்குரே போன்ற எனக்குப் பிடித்தமான பண்டங்களைச் சாப்பிடுவேன். மேலும், குர்குரே நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அந்நிறுவனம் பதிலளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
