விநாயகர் சிலைகள் வைக்க விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர முறையில் பரிசீலிக்கத் தயார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விநாயகர் சதுர்த்தி மத்திய குழு அறக்கட்டளையைச் சேர்ந்த ராமகோபாலன், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி பெறுவது குறித்து கடந்த 9ஆம் தேதியன்று தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். “உள்ளாட்சி அமைப்புகள், போலீசார், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை, ஆட்சியர் உள்ளிட்டோரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களாக விநாயகர் சிலைகளை வடிவமைத்து வரும் நிலையில், இறுதி கட்டத்தில் இது போன்ற நிபந்தனைகளை விதித்ததால் விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு, கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைப்பதற்கான அனுமதியை வழங்க ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த மனு, மீண்டும் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றைச் சாளர முறைப்படி, விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு பதிலளித்தது. அதுபோன்று, சிலைகள் வைக்கும் இடத்துக்கான மின் இணைப்பை வீடுகள், கடைகளில் பெற ஆட்சேபணை இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.
“ஆனால், விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்கக்கூடாது. அவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என நீதிபதி எச்சரித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக விதிக்கப்பட்ட 27 நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட 3 மனுக்கள் மீது நாளை (செப்டம்பர் 5) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
