இந்திய, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 312 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. நேற்று (நவம்பர் 24) இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது.
முதல் நாளான நேற்று டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை சேர்த்திருந்தது.
இன்று (நவம்பர் 25) இரண்டாம் நாள் ஆட்டத்தில், முரளி விஜய், சத்தீஸ்வர் புஜாரா இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்னைக் கணிசமாக உயர்த்தினர். தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். முரளி விஜய் 221 பந்துகளில் 128 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இரண்டு முறை தான் வழங்கிய கேட்ச் வாய்ப்புகளை இலங்கை அணியினர் தவறவிட்டதைச் சரியாகப் பயன்படுத்தி முரளி விஜய் சதம் அடித்தார்.
பின்னர் புஜாராவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 66 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி ஆட்ட முடிவில் 54 ரன்களைச் சேர்த்துள்ளார். புஜாரா 121 ரன்களுடன் களத்தில் உள்ளார். புஜாரா 246வது பந்தில் சதமடித்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 312 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை அணியைக் காட்டிலும் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.
