பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் நட்பாகப் பழகி அவர்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கும் கொடூர செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்த விவகாரத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இதனை மறுத்த ஜெயராமன், இச்சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததே தான்தான் என்று பேட்டியளித்தார்.
**எஸ்.பியின் மறுப்பு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது: டிடிவி**
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு தொடர்பில்லை என்று அவசர அவசரமாக எஸ்.பி மறுத்திருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்சி அதிகாரத்தில் மிக மையமாக இருக்கக் கூடிய இருவர் மீது குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. அது உண்மைதானோ என்று கருதும் வகையில் அதிமுகவிலிருந்து பார் நாகராஜன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கும் மேலே உயர்நிலையில் உள்ள முக்கிய புள்ளிகளின் உறவுகளைக் காப்பாற்றவே இந்த கண் துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை: சிபிஎம்**
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடனேயே இக்கொடுமைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவங்கள் மீது எடப்பாடி அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கோடு நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். உள்ளூர் காவல் துறைக்குத் தெரியாமலோ அல்லது ஆளும் கட்சியின் ஆசியும், ஈடுபாடும் இல்லாமலோ இது நீடித்து நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் அதிமுகவின் உயர்மட்ட பிரமுகரின் குடும்ப உறுப்பினர் பெயர் இதில் அடிபடுகிறது.
புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனைத் தாக்கிய அதிமுக உள்ளூர் முக்கியஸ்தர் பார் நாகராஜன் மீது அப்போதே நடவடிக்கை எடுக்காமல், வெகுஜன நிர்ப்பந்தம் அதிகமான பிறகு, இப்போது கட்சியைவிட்டு நீக்கியிருப்பதும் கேள்விகளை உருவாக்குகிறது” என்பது உள்பட பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் விசாரணைக் குழு இச்சம்பவம் குறித்து நாளை பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளது.
**மக்கள் நீதி மய்யம் பேரணி**
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி நடத்தப்பட்டது. நடிகை ஸ்ரீபிரியா, கவிஞர் சினேகன் தலைமையில் ஊர்வலமாக சென்ற மக்கள் நீதி மய்யத்தினர் பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
**திமுக ஆர்ப்பாட்டம்: கனிமொழி கைது**
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தியும் திமுக சார்பில் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று கனிமொழி அறிவித்தார். அதன்படி இன்று மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவினரும் கூட்டணிக் கட்சிகள், மாதர் சங்கத்தைச் சார்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பேசிய கனிமொழி, “ஒரு கும்பல் 7 ஆண்டுகளாக இந்த பாலியல் வன்முறையை செய்துகொண்டிருக்கிறது. ஆனால் காவல் துறை கைது செய்திருப்பது வெறும் 4 பேரைத்தான். 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், காவல் துறையின் கணக்கு மாறி மாறி இருக்கிறது. யாரைக் காப்பாற்ற இதனை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டது பெண்ணாகவோ குழந்தையாகவோ இருந்தால் அவர்களுடைய அடையாளம், பெயர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் அந்தப் பெண்ணின் பெயரை எஸ்.பி வெளியே சொல்கிறார். பெண்ணின் பெயரை வெளியிட்டதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அவ்வாறு வெளியிடும்போது பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வாய்திறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள்” என்று சந்தேகம் எழுப்பினார். 
தொடர்ந்து, “சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார் . அதிமுக பிரமுகர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அந்த வண்டியை ஓட்டினார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிடமே அந்த நபர் விடுதலை செய்யப்படுகிறார். அந்த வழக்கையே இழுத்து மூடுகிறார்கள். ஆனால் தற்போது அது விபத்தா அல்லது பலியான பெண் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டாரா கொலை செய்யப்பட்டாரா என்று நமக்கு சந்தேகம் எழுகிறது” என்றும் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கனிமொழி சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார்.
**பொள்ளாச்சி ஜெயராமன் மறுப்பு**
தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொள்ளாச்சி ஜெயராமன் இன்று தமிழக தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். 25 நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதன் மீது புகார் கொடுக்கச் சொன்னதும் நடவடிக்கை எடுக்கச் சொன்னதும் நான் தான். அவர்களுக்கு ஆதரவாக நான்தான் இருக்கிறேன் என்று பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ வெளியிட்டதோடு, அவரின் சகோதரர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
என் மகன்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு இதுவரை திமுகவினரோ கனிமொழியோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பதாக கூறுகிறார்கள், நாங்கள்தான் இதில் தலையிட்டு புகாரே கொடுக்க வைத்துள்ளோம். யார் மீதும் யார் வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டலாமா? திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் இது நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
