தனியார் கல்லூரிகளின் கைப்பாவை!

Published On:

| By Balaji

சமீப காலமாக தனியார் கல்லூரிகளின் கைப்பாவையாக அரசு பல்கலைக்கழகங்கள் மாறி வருகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ஜூலை 18 ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அரசு நிர்ணயித்துள்ள தகுதிகள் பல்கலைக்கழகங்களை சீர்குலைக்கும் தன்மை கொண்டவையாகும். இந்தத் தகுதிகளைக் கொண்டு தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான, திறமையான துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. திறமையற்ற துணைவேந்தர்களை மட்டுமே நியமிக்க முடியும்.

சமீப காலங்களில் தகுதியில்லாதவர்கள் பணத்தின் உதவியுடன் மட்டுமே பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளைக் கைப்பற்றினர். அதன்பிறகே தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் தரையைத் தொட்டது. இந்த நிலை மாற துணைவேந்தர் பணிக்கான தகுதிகள் கடுமையாக்கப் பட வேண்டும். ஆனால், தமிழக அரசு நிர்ணயித்தக் கல்வித்தகுதிகளை உற்று நோக்கினால் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோ, பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதோ கட்டாயமாக்கப்படவில்லை.

அண்மைக்காலமாகவே அரசு பல்கலைக்கழகங்கள் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் கைப்பாவையாக மாறி வருகின்றன. இதற்காக மிகவும் தந்திரமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள் திணிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒருவரையோ அல்லது தங்களது கல்லூரிகளில் பணியாற்றும் ஒருவரையோ துணைவேந்தர்களாக பரிந்துரைக்கின்றனர். இதை ஒழிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவோரையும் துணைவேந்தர்களாக நியமிக்க அனுமதித்தால் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் கல்லூரி ஆசிரியர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் தனியார் கல்லூரி லாபி எந்த அளவுக்கு வலிமையானது என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த உண்மை புரியக்கூடும். பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி தான் நிர்வகிக்கப்பட வேண்டும், அதன்படிதான் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படக் கூடாது.

பல்கலைக்கழக மானியக்குழு விதியில் அமைப்பின் மீதான உறுதிப்பாடு கொண்டவர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக 10 ஆண்டுகளோ அல்லது புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிர்வாக அமைப்புகளில் பேராசிரியருக்கு இணையான பதவியில் 10 ஆண்டுகளோ பணியாற்றிய கல்வியாளர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகைசால் கல்வியாளர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப் பட்டால் மட்டுமே கல்வி நிறுவனங்கள் தலைசிறந்தவையாக உருவெடுக்கும். மாறாக, தமிழக அரசின் புதிய விதிகளின்படி துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், அது ஒரு காலத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக விளங்கிய பல்கலைக்கழகங்களை தனியாரிடம் அடகு வைப்பதற்கு சமமானதாகிவிடும்.எனவே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய தகுதி விதிகளை நீக்கி விட்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share