நேற்று (ஏப்ரல் 21) இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 207 பேராவது உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் 450 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஈஸ்டர் தின பண்டிகை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பலியானோரில் சுமார் 35 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் 12 மணி நேரத்துக்கு இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனாவின் செயலாளர் உதயா ஆர்.செனவிரத்னா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணமாக ஏப்ரல் 24ஆம் தேதி வரை இலங்கையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளையும், வதந்திகளையும் தடுக்கும் நோக்கில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற பிரபல சமூக ஊடகங்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
உயிரிழந்த வெளிநாட்டவர்களில் இரண்டு பேர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் சில பிரிட்டிஷ் குடிமக்களும் சிக்கியுள்ளதாக இலங்கைக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் ஜேம்ஸ் தவுரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் எத்தனை பிரிட்டிஷார் உயிரிழந்தனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக ஏழு பேரை கைது செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தென் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “இவையனைத்துமே திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் என நம்புகிறோம். இத்தாக்குதல்களின் பின்னணியில் ஏதோவோர் அமைப்பு மட்டுமே இருக்க முடியும். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களைத் தியாகிகள் போல ஊடகங்கள் சித்திரிக்கக் கூடாது என வலியுறுத்திக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.