சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோகம்! 40 பேர் உடல் கருகி பலி… பாரில் நடந்தது என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

switzerland new year party fire accident 40 killed crans montana tamil news

உலகம் முழுவதும் 2026 புத்தாண்டை மக்கள் உற்சாகமாகக் வரவேற்றுக் கொண்டிருந்த வேளையில், சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த ஒரு கோர விபத்து உலகையே உலுக்கியுள்ளது. புத்தாண்டு பார்ட்டியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன? சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபலமான கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) என்ற மலைப்பிரதேச உல்லாச விடுதியில் உள்ளது ‘Le Constellation’ என்ற பார் (Bar). ஜனவரி 1-ம் தேதி அதிகாலை, புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இங்குத் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த கொண்டாட்டம், கண் இமைக்கும் நேரத்தில் மரண ஓலமாக மாறியது.

ADVERTISEMENT

விபத்துக்கான காரணம்: முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பார்ட்டியின் உச்சகட்டமாக ஷாம்பெயின் பாட்டில்களில் மத்தாப்பூக்களை (Sparklers) வைத்துப் பற்ற வைத்துள்ளனர். அந்த மத்தாப்பூவிலிருந்து வெளியேறிய தீப்பொறி, எதிர்பாராதவிதமாக பாரின் மேற்கூரையில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஃபோம் (Foam) மீது பட்டுள்ளது.

தீப்பொறி பட்ட வேகத்தில், ‘ஃபிளாஷ் ஓவர்’ (Flashover) முறையில் தீ அந்த அறை முழுவதும் மின்னல் வேகத்தில் பரவியது. உள்ளே இருந்தவர்களால் தப்பிக்க வழியின்றி, நெரிசலிலும் தீயிலும் சிக்கிக்கொண்டனர்.

ADVERTISEMENT

கருகிய உயிர்கள்: இந்தக் கோர விபத்தில் இதுவரை சுமார் 40 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதுதான் நெஞ்சை உலுக்குகிறது. தீயின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளதாக அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

விசாரணை: சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும், முழுக்க முழுக்க பாதுகாப்புக் குறைபாட்டால் (Safety Negligence) நடந்த விபத்து என்றும் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளே இந்த விபரீதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன.

ADVERTISEMENT

புத்தாண்டு மகிழ்ச்சி சோகத்தில் முடிந்த இந்தச் சம்பவம், சுவிட்சர்லாந்து நாட்டையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share