“கீரை, தக்காளி வாங்க மட்டுமே ஆன்லைன் ஆப்களைப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது.” இன்று தங்கக் கட்டிகளையும், ஐபோன்களையும், ஏன்… லட்ச ரூபாய் மதிப்பிலான ஆணுறைகளையும் கூட மக்கள் ‘குவிக் காமர்ஸ்’ (Quick Commerce) மூலம் ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டனர். ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான ‘டிரெண்ட்ஸ்’ அறிக்கை, இந்தியர்களின் விசித்திரமான மற்றும் ஆடம்பரமான ஷாப்பிங் பழக்கங்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
22 லட்சம்… 22 ஐபோன்கள்! இந்தியாவிலேயே அதிக செலவு செய்த “மெகா ஸ்பெண்டர்” (Mega Spender) ஒருவர், ஓராண்டில் மட்டும் சுமார் ₹22 லட்சத்திற்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் வாங்கியதில் 22 புத்தம் புதிய iPhone 17 போன்கள் அடக்கம்! அதுமட்டுமின்றி 24 காரட் தங்கக் காசுகளையும் இவர் காய்கறிகளோடு சேர்த்து வாங்கியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கேட்ஜெட் பிரியர் ஒருவர், ஒரே ஆர்டரில் (Single Cart) ₹4.3 லட்சத்திற்கு ஐபோன்களை அள்ளிக்குவித்துள்ளார்.
சென்னையின் ‘அந்த‘ நபர்: பட்டியலில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது சென்னையைச் சேர்ந்த ஒருவரின் செயல்பாடுதான். இவர் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் ₹1,06,398 ரூபாய்க்கு ஆணுறைகளை (Condoms) வாங்கியுள்ளார். மொத்தம் 228 முறை இவர் ஆர்டர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவசரத் தேவைகளுக்கும் ஆன்லைனையே மக்கள் நம்பியிருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
தங்கம் முதல் கருவேப்பிலை வரை:
- மும்பை: இங்குள்ள ஒருவர் ₹15.16 லட்சத்திற்குத் தங்கத்தை ஆர்டர் செய்துள்ளார்.
- பெங்களூரு: தீபாவளி சமயத்தில் ஒருவர் ₹1.97 லட்சத்திற்கு 1 கிலோ வெள்ளி (Silver Brick) வாங்கியுள்ளார்.
- கொச்சி: இங்குள்ள ஒரு பயனர், ஆண்டிற்கு 368 முறை கருவேப்பிலை ஆர்டர் செய்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட தினமும் ஸ்விக்கியில் கருவேப்பிலை வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
வேகம் மற்றும் தாராள மனசு: லக்னோவில் மேகி நூடுல்ஸ் வெறும் 2 நிமிடங்களிலும், டெல்லியில் ஐபோன் 17 வெறும் 3 நிமிடங்களிலும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பயனர் ஒருவர், தனக்கு டெலிவரி செய்த ஊழியர்களுக்கு ஓராண்டில் மட்டும் ₹68,600 டிப்ஸ் (Tips) கொடுத்துத் தனது தாராள குணத்தைக் காட்டியுள்ளார்.
அவசரத் தேவைக்காகத் தொடங்கப்பட்ட இன்ஸ்டாமார்ட் போன்ற சேவைகள், இன்று ஆடம்பரப் பொருட்களை வாங்கும் தளமாக மாறிவிட்டன. “எதுவும் உடனே வேண்டும்” என்ற இந்தியர்களின் மனநிலையே இந்த மாற்றத்திற்குக் காரணம்!
