கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று, 31 ஆண்டு சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைவரானார் நடிகை ஸ்வேதா மேனன்.
கேரள திரையுலகில் பூகம்பமாக வெடித்த ஹேமா கமிட்டி அறிக்கையால், மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம் AMMA (Association of Malayalam Movie Artists) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது.
இதனையடுத்து நடைபெற்ற மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனேன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பாக அவர் மீது ஆபாச உள்ளடக்கம் தொடர்பாக தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 67 A இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் கேரள உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் கடும் எதிர்ப்பிற்கிடையே கொச்சியில் இன்று நடந்த தேர்தலில், ஸ்வேதா மேனன் 159 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் தேவன் 132 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
மேலும் குக்கு பரமேஸ்வரன் 172 வாக்குகளுடன் பொதுச் செயலாளராகவும், ஆன்சிபா ஹாசன்இணைச் செயலாளராகவும், லட்சுமி பிரியா மற்றும் ஜயன் சேர்த்தலா துணைத் தலைவர்களாகவும், உன்னி சிவபால் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 31 ஆண்டுகள் வரலாறு கொண்ட மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் யாருக்கு எதிராகவும் இல்லை. ஆனால் எனக்கு ஒரு திட்டம் உள்ளது… அது மிகப்பெரிய விஷயம்… தயவுசெய்து அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள், ஆனால் மாற்றத்திற்காக நாங்கள் ஏதாவது செய்வோம்” என்று ஸ்வேதா மேனன் உறுதிபட கூறியுள்ளார்.
மேலும் அவர், “இப்போது அம்மா சங்கத்தின் முன்னேற்றமே எங்களது முக்கிய இலக்காக உள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் குடும்பமாக செயல்படுவோம்” என்றும் தெரிவித்தார்.
