தமிழர்களின் அடிப்படை உணவாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்தது வரகு. பல நாடுகளின் பாரம்பர்ய உணவு. வறட்சியான நிலத்தில்கூட விளையும் ஆற்றல்கொண்டது. உடலுக்கு அதிக சக்தியளிக்கும்.
விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், நீரிழிவாளர்களுக்கு உகந்த பனிவரகு மாவில் கோதுமை மாவு சேர்த்து இந்த ஸ்வீட்லெஸ் போளி செய்து சாப்பிடலாம்.
என்ன தேவை?
பனிவரகு மாவு – ஒரு கப்
கோதுமை மாவு, வெல்லம் – தலா அரை கப்
எண்ணெய் – தேவையான அளவு
பூரணம் செய்ய…
நெய் – கால் கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பொடித்த வெல்லம் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெல்லத்துடன் அரை கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அந்த மாவை எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும்.
வாயகன்ற பாத்திரத்தில் பூரணம் செய்ய கொடுத்துள்ள வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்விட்டு கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக்கவும். திரட்டிய சப்பாத்தியின் நடுவே பூரண உருண்டைகளை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் வட்டமாகப் போளி போல தேய்க்கவும். எண்ணெய்விட்டு, சப்பாத்திக்கல்லைக் காயவைத்து போளிகளைப் போட்டு சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பூரி போல பொரித்தும் எடுக்கலாம்.
