கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூலை குவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் பிரமாண்ட பொருட்செலவில் சூர்யா திரை வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக உருவான கங்குவா திரைப்படம் தமிழகத்தில் 800 திரைகள், வட இந்தியாவில் 3500 திரைகள் என இந்தியளவில் 6,000 திரைகள் உட்பட உலகம் முழுவதும் சுமார் 11,000 திரையரங்குகளில் நேற்று வெளியானது.
படக்குழுவினர் கடந்த இருவார காலமாக ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் கங்குவா குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த படத்தில் நிகழ்காலம் மற்றும் இறந்தகாலம் என இரு காலங்களில் இரண்டு ரோல்களில் நடித்து சிறப்பான நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியுள்ளார் என்று ஒருபக்கம் பாராட்டு பெற்றாலும், மற்றொரு பக்கம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதற்கிடையே கங்குவா படம் ஏற்படுத்திய ஹைப்பிற்காக படத்திற்கு அமோகமான முன்பதிவு கிடைத்தது.
இந்தநிலையில் உலகம்முழுவதும் கங்குவா முதல் நாள் வசூலாக 48.50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா திரை வாழ்க்கையில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்றால் அது ‘சிங்கம் 2’ தான். சுமார் 12.35 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.
இந்தநிலையில் சூர்யா படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக கங்குவா இடம் பிடித்துள்ளது.
முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் கங்குவா வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 42.30 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்தது. நேற்று வரை சுமார் 283 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
திமுக… அதிமுகவுக்கு மக்களை பற்றி கவலையில்லை : உயர் நீதிமன்றம் வேதனை!
”பொய்க்கு மேக்கப் போடுகிறார் எடப்பாடி” : ஸ்டாலின் விமர்சனம்!