3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, இந்திய ஆடவர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பர் 10 துவங்கிய டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதித்தது. டர்பனின் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த போட்டி, நாள் முழுவதும் மழை கொட்டித்தீர்த்ததால், டாஸ் கூட இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கெபெர்ஹா செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற 2வது போட்டியில், முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டென் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
சர்வதேச டி20 போட்டிகளில், இந்திய அணிக்காக 2 துவக்க ஆட்டக்காரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறுவது, இது 2வது முறை.
இதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சியை கண்டு பதற்றம் கொள்ளாமல், வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக 36 பந்துகளில், 3 சிக்ஸ், 5 ஃபோர்களுடன் 56 ரன்களையும் குவித்து அசத்தினார்.
இந்நிலையில், இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 2,000 ரன்களை கடந்துள்ளார்.
https://twitter.com/BCCI/status/1734598947124236684
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிறகு, இந்த சாதனையை எட்டும் 4வது இந்தியர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, குறைந்த இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கோலி 56 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை கடந்த நிலையில், சூர்யகுமார் யாதவும் அதே 56 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த இலக்கை எட்டியுள்ளார்.
இவர்களுக்கு முன்னதாக, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் 52 இன்னிங்ஸ்களில் 2,000 டி20 ரன்களை கடந்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் இவர்களுக்கு அடுத்து, 58 இன்னிங்ஸ்களில் 2,000 டி20 ரன்களை சேர்த்த கே.எல்.ராகுல் உள்ளார்.
மேலும், வெறும் 1164 பந்துகளில் இந்த இமாலய இலக்கை எட்டியுள்ள சூர்யகுமார் யாதவ், பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
இவை மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்க மண்ணில், சர்வதேச டி20 போட்டிகளில் அரைசதம் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
ஹீரோ அவதாரமெடுக்கும் RJ விஜய்… ஹீரோயின் யார் தெரியுமா?
ஆளுநர் ரவிக்கு எதிராக கூடுதல் மனு… இன்று உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?