முதல் படத்திலேயே (ஆனந்தம்) மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கி, இரண்டாவது படத்தில் (ரன்) சாக்லெட் பாய் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தி, மூன்றாவது படத்தில் (ஜி) அஜீத்தை வைத்து ஒரு ஃ பிளாப் கொடுத்து, நான்காவது படத்தில் (சண்டக்கோழி) விஷாலின் மார்க்கெட்டை உயர்த்தியவர் லிங்குசாமி. கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய பையா, ஒரு ஆங்கிலப்படத்தின் பின்னணியில் அமைந்த ஒரு சூப்பர் படம்.
இவரது கேரியரில் பெரிய ஆபத்தாக வந்தது அஞ்சான் படத்தின் தோல்வியும் கமல் நடிக்கும் உத்தம வில்லன் படம் எனும் யானையைக் கட்டித் தீனி போட நினைத்து தானியமும் தீர்ந்ததோடு, யானையும் படுத்து விட்டதும்தான்.
பையா படத்தின் தெலுங்கு உருவாக்கமான ‘ஆவரா’ பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது ரீ லீசாகியா நிலையில். ஆவராவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இதை அடுத்து லிங்குசாமியின் ‘அஞ்சான்’ மறு வெளியீட்டுக்கு தயார்.
உண்மையில் அஞ்சான் படத்துக்கு ரிலீஸுக்கு முன்பு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் லிங்குசாமி” நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வச்சிருக்கேன்” என்று பேட்டி கொடுக்க, படம் தோல்வி அடைந்த பிறகு அந்த வாக்கியத்தை வைத்தே பெரிதாக கிண்டல் செய்யப்பட்டார் லிங்குசாமி.
நீளம் குறைக்கப்பட்டு புதிதாக சென்சார் வாங்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த புதிய அஞ்சான் படத்தை நடிகர் சிவகுமார், 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர்கள் சரண், பிருந்தா சாரதி, எடிட்டர் ஆண்டனி இவர்களுடன் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் 70 பேர் ஸ்பெஷல் ஷோவில் பார்த்தனராம்.. படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்போதாவது லிங்குசாமி கத்துகிட்டு இறக்கி வச்ச மொத்த வித்தையும் பலன் தரட்டும்.
- ராஜ திருமகன்
