ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45ஆவது படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்தத் தகவலின் படி, ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அதே போன்ற ஒரு அம்மன் படத்தை இயக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ‘மாசாணி அம்மன்’ என்கிற தலைப்பில் ஒரு கதையை உருவாக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
ஆனால், அதில் நடிக்க ‘ஸ்டார்’ கதாநாயகிகள் வேண்டும் என்பதால் அதே கதையை ஒரு ஆண் தெய்வத்தைப் பற்றின கதையாக உருவாக்கி அதில் தானே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
அந்தக் கதையில் விஜய்யை முதன்மை கதாபாத்திரமாக வைத்து எடுக்க, விஜய்யிடம் கூறியுள்ளார். இதுகுறித்தான செய்திகளும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது அனைவருக்கும் நினைவிருக்கும்.
ஆனால், பல்வேறு காரணங்களால் விஜய்யால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.இதே கதையைத் தான் தற்போது சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளாராம்.
ரேடியோ ஜாக்கியாக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தின் மூலம் காமெடியனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதற்கு பின்னர், ‘நானும் ரவுடி தான்’, ‘இவன் தந்திரன்’ , ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் வெகுவாக ரசிக்கப்பட்டது.
தன்னை முதன்மை கதாபாத்திரமாக வைத்து அவரே எழுதிய ’எல்.கே.ஜி’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் நடிகை நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாக வைத்து அவர் எழுதி இயக்கிய திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு மாடர்ன் அம்மன் திரைப்படமான அந்தத் திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு கடவுள் சார்ந்த ஃபேண்டசி கதையைக் கையில் எடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து இதுபோன்ற ஃபேண்டசி கதைகள் வருவது தமிழ் சினிமாவில் மிகக் குறைவே.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ கதையும் விஜய்யிடம் கார்த்திக் சுப்புராஜ் ஒரு கட்டத்தில் கூறிய கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… பொதுமக்கள் கவலை!