சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று (ஏப்ரல் 16) வெளியிடப்படும் என்று கடந்த வாரம் படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருந்தது.
படத்தின் தலைப்பு “அக்கினீஸ்வரன்” என இருக்கலாம் அதனால்தான் A என்கிற எழுத்து பெரிதாக முதன்மைப்படுத்தப்படுகிறது என இணையதளங்களில் செய்தி வெளியாகி வந்தது.
சூர்யா படத்திற்கான தலைப்பு” கங்குவா” என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளை விட வட இந்தியாவில் இந்தப்படத்தைப் பெரிதாகப் பேச வைக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இந்தப் பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று ஏப்ரல் 13-ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘கங்குவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
கங்குவா ஃபேன்டஸி கதையை மையமாகக் கொண்ட படம் என்றும், கடந்தகாலம், தற்போதைய காலகட்டத்திலும் கதை நடப்பது போல படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிட்டதை வீடியோ உறுதிப்படுத்துகிறது
இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார்.

‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகியாக நடிக்கிறார் என்றும் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
படத்தின் தலைப்பு, வெளியிடப்பட்டுள்ள வீடியோ இவற்றை பார்க்கும்போது நடிகர் சூர்யா அகில இந்திய நட்சத்திரமாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் முயற்சியை கங்குவா படத்தின் மூலம் தொடங்கியுள்ளார் என தெரிகிறது.
ராமானுஜம்
