நிஜ செங்கேணிக்கு உதவிய சூர்யா

Published On:

| By Balaji

போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்று நடிகர் சூர்யாவுக்கு, ஜெய்பீம் படத்தைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்று எழுதினார்.

ADVERTISEMENT

அதில், போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி (நிஜ செங்கேணி) போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பார்வதிக்கும் அவர்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த கடிதத்துக்குப் பதிலளித்துள்ள சூர்யா ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

ADVERTISEMENT

இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள் சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

மேலும் மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாளின் பெயரில் ‘10 இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

ADVERTISEMENT

மேலும் குறவர் சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்துக்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share